ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை: தற்போதைய சூழலில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தேவை இல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி
ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்காக தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தேவை இல்லை என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி,
இதுகுறித்து அவர் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக முதல்-அமைச்சர் தெரிவித்து உள்ளார். அதேபோன்று மதுரை ஐகோர்ட்டு, தற்போதைய நிலை தொடரவும் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி அடுத்த மாதம் 21-ந் தேதி வரை இதே நிலை தொடரும். ஆலையை மீண்டும் திறக்கப்போவது இல்லை. சட்டரீதியாக தொடர்ந்து போராடுவோம்.
மக்கள் அச்சப்பட தேவை இல்லை. ஆர்ப்பாட்டம் நடத்தவும் தேவை இல்லை. குழந்தைகளை அழைத்து வரவேண்டியதும் இல்லை. ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்காக தற்போது உள்ள சூழ்நிலையில் மனு கொடுக்க தேவை இல்லை. நாங்கள் குழந்தைகளை போராட்டத்துக்கு அழைத்து வருபவர்களை ஊக்குவிப்பது கிடையாது.
அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதுவரை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். அடுத்த வாரம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மாற்று பொருட்கள் குறித்த கண்காட்சியும் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
Related Tags :
Next Story