கேபிள் டி.வி.க்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை குறைக்கக்கோரி மக்களை திரட்டி போராட்டம் - ஆபரேட்டர்கள் பொது நலச்சங்க நிறுவன தலைவர் பேட்டி
கேபிள் டி.வி.க்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை குறைக்கக்கோரி மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலச்சங்க நிறுவன தலைவர் சகிலன் கூறினார்.
விழுப்புரம்,
கேபிள் டி.வி.க்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும், அலக்கார்ட் முறையில் கேபிள் டி.வி. சேனல்களுக்கு ரூ.19 என்பதை ரூ.5 ஆக குறைக்க வேண்டும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலச்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகதீஸ்வரன் வரவேற்றார். சங்க நிறுவன தலைவர் சகிலன், மாநில துணை செயலாளர் கந்தன், விழுப்புரம் நுகர்வோர் பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகி நூர்அகமது, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் ஜவகர்குமார், குமரவேல், கேசவன், அன்பழகன், தனசேகர், சீனிவாசன், முத்துக்குமரன், பாண்டியன், ராஜேந்திரன், குமார், நாராயணன், சவுகத், முருகன், மாயகிருஷ்ணன், மூர்த்தி உள்பட கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.
கட்டணம் உயர்வு
முன்னதாக தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலச்சங்க நிறுவன தலைவர் சகிலன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒட்டுமொத்த இந்தியாவில் கேபிள் டி.வி. மூலம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காணக்கூடிய சாதாரண ஏழை, எளிய மக்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வருகிற 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் இலவச சேனல்களை மட்டும் காண முடியும் என்று அறிவித் துள்ளது. அதற்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு 100 ரூபாய் கட்டணம் என்ற அடிப்படையில் மக்கள் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. மறுபுறம் கட்டண சேனல்களாக இருக்கக்கூடிய 400-க்கும் மேற்பட்ட சேனல்களை எம்.ஆர்.பி. முறையில் வரையறுக்கப்பட்டு ஒவ்வொரு சேனலுக்காக 20 ரூபாய் கட்டணம் செலுத்தக்கூடிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த அதிகப்படியான கேபிள் டி.வி. கட்டணத்தை உயர்த்தி மக்களின் தலையில் மாதம் ரூ.500 முதல் ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கக்கூடிய அபாயம் உள்ளது. இந்த நடவடிக்கையை தடுக்கும் வகையிலும் இதனால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற அச்சத்தை போக்கக்கூடிய வகையிலும் இன்று தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி மக்கள் படக்கூடிய துயரத்தையும், அதிக கட்டணம் செலுத்தக்கூடிய துன்பத்தை பற்றியும் அரசுக்கு கொண்டு செல்கிற வகையில் மாவட்ட கலெக்டர்களை சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.
நேற்றைய முன்தினம் கேபிள் டி.வி. தவிர்த்து சினிமா டிக்கெட் கட்டணம் உள்பட ஜி.எஸ்.டி. வரிகுறைப்பு செய்திருக்கிற மத்திய அரசு, கேபிள் டி.வி. கட்டணத்திற்காக வரியாக செலுத்தக்கூடிய 18 சதவீத வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வலியுறுத்தியும், கொள்ளை லாபம் அடிக்கக்கூடிய கட்டண சேனல்களின் கட்டணத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், சென்னையில் அடுத்த மாதம் (ஜனவரி) 30-ந் தேதி மாநிலம் தழுவிய அளவில் லட்சக்கணக்கான மக்களை திரட்டி அவர்களோடு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் இணைந்து கவர்னர் மாளிகை நோக்கி பிரமாண்ட பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story