நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு மணிமுத்தாறு அருவியில் குளிக்க 2-வது நாளாக தடை
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால், பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மணிமுத்தாறு அருவியில் நேற்று 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லேசான மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை நேற்று முன்தினமும், நேற்றும் தொடர்ந்து அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக மழை பெய்துள்ளது. இதையொட்டி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
பாபநாசம் அணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 375 கன அடியாக வந்து கொண்டிருந்த தண்ணீர் நேற்று காலை 1,424 கன அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,216 கன அடி தண்ணீர் பாசனத்துக் காக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணை நீர்மட்டம் நேற்று காலை 120.30 அடியாக இருந்தது. இதே போல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 120.67 அடியாக இருந்தது.
மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 567 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதே போல் பிற அணைகளுக்கும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணி கள் குளிக்க நேற்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. நெல்லை மாநகரில் நேற்று பகலில் வானம் மேக மூட்டமாக காட்சி அளித்தது. ஒருசில நேரங்களில் லேசான தூறலும், மாலையில் சற்று பலத்த மழையும் பெய்தது. இதனால் நெல்லை சந்திப்பு தற்காலிக பஸ் நிறுத்தங்களில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் நிழற்குடை இல்லாததால் சிரமப்பட்டனர்.
வள்ளியூர் பகுதியில் நேற்று மதியம் திடீரென்று பலத்த மழை பெய்தது. இதனால் வள்ளியூர் ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது மெயின் ரோடு பகுதியில் கழிவுநீர் செல்லக்கூடிய கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீருடன், கழிவு நீரும் கலந்து ரோட்டில் ஓடியது. இதனால் பொது மக்கள் சாக்கடை தண்ணீரில் படாமல் நடுரோட்டில் நடந்து சென்றனர். இதையொட்டி அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை அறிந்த வள்ளியூர் நகர பஞ்சாயத்து தொழிலாளர்கள் விரைந்து வந்து கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்தனர்.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம் -58, சேர்வலாறு -39, மணிமுத்தாறு -24.8, கடனா -18, ராமநதி -38, கருப்பாநதி -0.5, வடக்கு பச்சையாறு -1, அம்பை -5.40, ஆய்குடி -3, சேரன்மாதேவி -5.80, பாளையங்கோட்டை -4, செங்கோட்டை -2, சிவகிரி -2, தென்காசி -5, நெல்லை -3.30.
Related Tags :
Next Story