புதுப்பேட்டை அருகே மீண்டும் திறக்கப்பட்ட மணல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் - 108 பேர் கைது


புதுப்பேட்டை அருகே மீண்டும் திறக்கப்பட்ட மணல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் - 108 பேர் கைது
x
தினத்தந்தி 25 Dec 2018 3:30 AM IST (Updated: 25 Dec 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்ட மணல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 108 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுப்பேட்டை,

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள எனதிரிமங்கலம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குவாரியால் ஆற்றங்கரை பகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்று கூறி கிராம மக்கள், இந்த குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசியல் கட்சியினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதன் காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் மணல் குவாரியை செயல்படுத்திட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக பொக்லைன் எந்திரங்கள் ஆற்றுக்குள் கொண்டு வரப்பட்டது. கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் மணல் குவாரி இயக்கப்படுவது பற்றி அறிந்த கிராம மக்கள் மற்றும் அ.தி.மு.க. முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், மக்கள் பாதுகாப்பு கவசம் தட்சிணாமூர்த்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் எனதிரிமங்கலம் கிராமத்தில் பண்ருட்டி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பண்ருட்டி சுந்தரவடிவேல், சேத்தியாத்தோப்பு ஜவகர்லால், இன்ஸ்பெக்டர்கள் வீரமணி, ராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து கலைந்து போகுமாறு தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள், மணல் குவாரியை மூடினால் தான் கலைந்து செல்வோம் என்று தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 86 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன், குவாரியில் இருந்து லாரிகளில் மணல் அள்ளி அனுப்பி வைக்கப்பட்டது. புதுப்பேட்டையில் மணல் லாரிகள் சென்ற போது, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மாவட்ட தலைவர் சுரேந்தர் தலைமையில் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று, 22 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் புதுப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மணல் குவாரிக்கு எதிராக அடுத்தடுத்து நடந்த போராட்டங்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story