கோர்ட்டு உத்தரவிட்டும் ராணுவ வீரர் உடல் மறுபிரேத பரிசோதனை தாமதம்


கோர்ட்டு உத்தரவிட்டும் ராணுவ வீரர் உடல் மறுபிரேத பரிசோதனை தாமதம்
x
தினத்தந்தி 25 Dec 2018 3:30 AM IST (Updated: 25 Dec 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

மர்மமான முறையில் இறந்த ராணுவ வீரர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வது கோர்ட்டு உத்தரவிட்டபிறகும் தாமதமாகி வருகிறது.

கண்ணமங்கலம்,


கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 32), ராணுவ வீரர். இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். கடந்த நவம்பர் மாதம் 20-ந் தேதி மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பாலசுந்தரத்தின் உடல் இருந்தது. இது குறித்து அவரது மனைவி மோகனா (26) கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பாலசுந்தரத்தின் இறப்பை போலீசார் தற்கொலை என்று வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் அவரது உடல் வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது மனைவி மோகனா, தனது கணவர் பாலசுந்தரம் சாவில் மர்மம் உள்ளது என்றும், அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்பதால் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனு செய்திருந்தார்.

இது குறித்து முதன்மை நீதிபதி மகிழேந்தி விசாரணை நடத்தி பாலசுந்தரத்தின் உடலை ஆரணி தாசில்தார் முன்னிலையில் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டிருந்தார். மேலும் இதற்கான அறிக்கையை நாளைக்குள் (புதன்கிழமை) கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என அதில் கூறியருந்தார்.

கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நேற்று பாலசுந்தரத்தின் உடலை மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய பரிந்துரை செய்து ஆரணி அரசு மருத்துவர்களுக்கு தாசில்தார் கிருஷ்ணசாமி கடிதம் வழங்கியிருந்தார். ஆனால் ஆரணி மருத்துவமனை டாக்டர்கள், “வேலூர் அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனையில் மூத்த மருத்துவர் நரேந்திர குமார் அறிக்கை வழங்கியுள்ளார்.

எனவே திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனை டாக்டர்கள்தான் மறுபிரேத பரிசோதனை செய்ய முடியும் என ஆரணி டாக்டர்கள் கூறி விட்டனர். இதனால் ஆரணி தாசில்தார் கிருஷ்ணசாமி, திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனை டீனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதன் காரணமாக திருவண்ணாமலையில் இருந்து அரசு மருத்துவர்கள் வந்த பின்னர் பிரேத பரிசோதனை நடைபெறும் என ஆரணி தாசில்தார் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

Next Story