நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்கள் மண்எண்ணெய் கேனுடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு


நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்கள் மண்எண்ணெய் கேனுடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Dec 2018 4:45 AM IST (Updated: 25 Dec 2018 2:17 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்கள் மண்எண்ணெய் கேனுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேதாரண்யம் கஞ்சாண்டிக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், வேதாரண்யம் பகுதியில் கஜா புயல் அடித்து 37 நாட்களாகியும் இதுவரை மின்சார வசதி வழங்கவில்லை. இந்த நிலையில் மின்கம்பம் அமைப்பதற்காக, மின்வாரிய ஊழியர்கள் பொக்லின் எந்திரத்துடன் வந்தனர்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர், மின்வாரிய ஊழியர்களை தடுத்து நிறுத்தி பீர் பாட்டில்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அவர்கள், மின்கம்பம் அமைக்காமல் திரும்பி சென்றனர். இதுகுறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு மின் இணைப்பு கிடைக்க இடையூறாக உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர்.

மனுவை கொடுத்து விட்டு வெளியில் வந்த கிராம பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திடீர் என்று மண் எண்ணெய் கேனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை பார்த்ததும் அங்கு விரைந்து வந்த நாகூர் போலீசார், மண்எண்ணெய் கேனுடன் திடீர் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பறித்ததுடன் அவர்களை எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கீழப்பிடாகை ஊராட்சி சிந்தாமணி மெயின் சாலையை சேர்ந்த ராஜசேகர் கொடுத்த கோரிக்கை மனுவில், நான் 3 ஆண்டுகளாக வசித்து வரும் எனது வீட்டுக்கு ரசீது தரக்கோரி ஊராட்சி செயலாளரிடம் மனு அளித்தேன். ஆனால் அவர் இதுவரை வீட்டு வரி ரசீதும், 100 நாள் வேலை அட்டையினையும் தர மறுக்கிறார். கஜா புயலினால் எனது வீடு பாதிப்பிற்குள்ளானது. இதுவரை நிவாரண தொகையும் எனக்கு வழங்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.


Next Story