முதுமலையில் நடந்த புலிகள் கணக்கெடுப்பு பணி நிறைவு


முதுமலையில் நடந்த புலிகள் கணக்கெடுப்பு பணி நிறைவு
x
தினத்தந்தி 25 Dec 2018 4:00 AM IST (Updated: 25 Dec 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் நடந்த புலிகள் கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றது.

மசினகுடி,

தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களில் முதுமலை புலிகள் காப்பகம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக தெரியவந்து உள்ளது. இதற்கிடையில் புலிகள் காப்பகங்களில் உள்ள புலிகளை ஆண்டுக்கு 2 முறை கணக்கெடுக்க வேண்டும் என்று தேசிய புலிகள் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி ஆண்டுக்கு 2 முறை கணக்கெடுப்பு பணி நடத்தபட்டு வருகிறது.

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இந்த ஆண்டில் 2-ம் கட்ட புலிகள் கணக்கெடுப்பு பணி கடந்த 18-ந் தேதி தொடங்கியது.

முதற்கட்டமாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வனக்குழுவினருக்கு பயிற்சி அளிக்கபட்டது.

பின்னர் 18-ந் தேதி அதிகாலை முதல் 22-ந் தேதி மாலை வரை 64 வனக்குழுவினர் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி, சிங்காரா, சீகூர், தெப்பகாடு, முதுமலை, கார்குடி, நெலாக்காட்டை ஆகிய 7 வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.

பணி நிறைவு பெற்றதால் கணக்கெடுப்பின்போது, வனக்குழுவினர் சேகரித்த தகவல்கள் நேற்று முன்தினம் மாலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

அதில் முதுமலை புலிகள் காப்பகத்தின் மைய பகுதியில் 5 புலிகள், 3 சிறுத்தைப்புலிகளை நேரடியாக வனக்குழுவினர் பார்த்துள்ளது தெரியவந்துள்ளது. இதேபோன்று வெளிமண்ட பகுதியில் 6 புலிகள் மற்றும் 2 சிறுத்தைப்புலிகளும் தென்பட்டுள்ளன.

மொத்தம் 11 புலிகள், 5 சிறுத்தைப்புலிகள் மற்றும் கரடிகள், யானைகள், செந்நாய்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகளை பார்த்துள்ளனர். கடந்த கணக்கெடுப்பை போன்று இந்த முறையும் வனவிலங்குகள் அதிகளவு தென்பட்டதாக வனக்குழுவினர் தெரிவித்தனர்.

Next Story