மஞ்சூர் வழியாக கோவைக்கு 3-வது மாற்றுப்பாதை அமைக்க ரூ.47 கோடி ஒதுக்கீடு


மஞ்சூர் வழியாக கோவைக்கு 3-வது மாற்றுப்பாதை அமைக்க ரூ.47 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 24 Dec 2018 10:00 PM GMT (Updated: 24 Dec 2018 9:09 PM GMT)

மஞ்சூர் வழியாக கோவைக்கு 3-வது மாற்றுப்பாதை அமைக்க ரூ.47 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,


நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து குன்னூர், பர்லியார் வழியாக தேசிய நெடுஞ்சாலையும், ஊட்டி- கோத்தகிரி, குஞ்சப்பனை வழியாக மேட்டுப்பாளையத்துக்கு மாநில நெடுஞ்சாலையும் செல்கிறது. இச்சாலைகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என ஆண்டுதோறும் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இக்காலக்கட்டத்தில் ஊட்டி- குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலைகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.

கடந்த 1976, 1989, 1993, 1999 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் பலத்த மழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஊட்டி- குன்னூர், மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கோத்தகிரி சாலைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டு பல வாரங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 2009-ம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில் கோவையில் இருந்து கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், குண்டல்பெட் மற்றும் கூடலூர் வழியாக அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரப்பட்டது.

இதனால் 1961-ம் ஆண்டில் கோவையில் இருந்து மின் உற்பத்தி நிலைய பணிக்காக ஊழியர்கள் வந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட மஞ்சூர், கெத்தை, பெரும்பள்ளம், வெள்ளியங்காடு வழியாக காரமடைக்கு செல்லும் சிறிய சாலையை அகலப்படுத்தி 3-வது மாற்றுப்பாதையாக திறக்க வேண்டும் என நீலகிரி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்காக ஊட்டியில் இருந்து மஞ்சூருக்கு 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்ச்சாலையும், பின்னர் அங்கிருந்து பெரும்பள்ளம், கெத்தை பகுதிக்கு 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையும் போடப்பட்டது. இதேபோன்று கெத்தை பெரும்பள்ளத்தில் இருந்து வெள்ளியங்காடு காரமடைக்கு செல்லும் 23 கிலோ மீட்டர் தூரத்துக்கும் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் சிறிய ரக வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்துக்கு ஏற்றதாக சாலை மாறியது. இருப்பினும் கனரக வாகனங்களை ஓட்டி செல்லும் வகையில் 3-வது மாற்றுப்பாதையை அகலப்படுத்தி பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதை ஏற்று நீலகிரி-கோவை இடையே 3-வது மாற்றுப்பாதை அமைக்க தமிழக அரசு ரூ.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மஞ்சூரில் இருந்து பெரும்பள்ளம், கெத்தை வரையிலான பணிகளுக்கு ரூ.25 கோடியும், பின்னர் அங்கிருந்து வெள்ளியங்காடு, காரமடை வரையிலான பணிகளுக்கு ரூ.22 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, சாலை அகல பணிக்கான டெண்டர் வருகிற 8-ந் தேதி விடப்பட உள்ளது. இதனால் நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு விரைவில் தீர்வு கிடைத்து உள்ளது.

Next Story