தனுஷ்கோடி அருகே சுற்றுலா வாகனம்-மினி வேன் மோதல்; 11 பேர் படுகாயம்


தனுஷ்கோடி அருகே சுற்றுலா வாகனம்-மினி வேன் மோதல்; 11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 25 Dec 2018 3:30 AM IST (Updated: 25 Dec 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி அருகே சுற்றுலா வாகனம், மினி வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராமேசுவரம், 

கேரள மாநிலத்தை சேர்ந்த 15 பேர் சாமி தரிசனம் செய்வதற்காக ராமேசுவரம் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு ராமேசுவரத்தை சேர்ந்த ஒரு சுற்றுலா வாகனத்தில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ராமேசுவரம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். அந்த வாகனத்தை ராமேசுவரம் புதுரோடு பகுதியை சேர்ந்த டிரைவர் நம்பு விக்னேஷ் என்பவர் ஓட்டி சென்றார்.

இதேபோல் ராமேசுவரத்தில் இருந்து மின் வேனில் 7 பேர் தனுஷ்கோடி நோக்கி சென்றனர். மினி வேனை கருப்புச்சாமி என்பவர் ஓட்டினர்.

தனுஷ்கோடி அருகே எம்.ஆர்.சத்திரம் பாறையடி என்ற இடத்தில் வந்தபோது சுற்றுலா வாகனமும், மினி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனங்களின் முன்பக்க பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் மினி வேனில் வந்த டிரைவர் கருப்புச்சாமி, பரமேசுவரி, கவுசல்யா உள்பட 5 பேரும், சுற்றுலா வாகனத்தில் வந்த டிரைவர் நம்பு விக்னேஷ், கேரளாவை சேர்ந்த விஜேஷ்(வயது 40), சுவிக்சன்(48), வினோதன்(47), ராய்ஷா, ஆருஷ் ஆகிய 6 பேரும் படுகாயமடைந்தனர்.

பின்னர் படுகாயமடைந்த 11 பேரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தனுஷ்கோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story