மத்தியில் ஆட்சிமாற்றம் வந்தால்தான் புதுச்சேரிக்கு விடிவுகாலம் நாராயணசாமி சொல்கிறார்


மத்தியில் ஆட்சிமாற்றம் வந்தால்தான் புதுச்சேரிக்கு விடிவுகாலம் நாராயணசாமி சொல்கிறார்
x
தினத்தந்தி 25 Dec 2018 5:00 AM IST (Updated: 25 Dec 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

மத்தியில் ஆட்சிமாற்றம் வந்தால்தான் புதுச்சேரிக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நவீனாகார்டன் திருமண நிலையத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர் பழனி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-
புதுவையில் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற நானும், அமைச்சர்களும் தொடர்ந்து போராடி வருகிறோம். மத்தியில் பிரதமர் மோடியும், புதுவையில் கவர்னர் கிரண்பெடியும் இருந்து அதை தடுத்து வருகிறார்கள். புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு நம்மை புறக்கணிக்கிறது.

மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு 90 சதவீத நிதியை மானியமாக வழங்குகிறது. ஆனால் புதுச்சேரிக்கு 26 சதவீத நிதிதான் வழங்குகிறது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டைவிட ரூ.500 கோடி வருமானத்தை பெருக்கி உள்ளோம். சட்டம் ஒழுங்கும் கட்டுப்பாட்டில் உள்ளது.

மத்திய அரசு குறைவான நிதியே தருவதால் மக்கள் நல திட்டங்களை சரியான நேரத்தில் நிறைவேற்ற முடியவில்லை. முன்பு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது புதுச்சேரிக்கு நிறைய நிதி தந்தார்கள். புதுவைக்கு பொதுகணக்கு இருந்தபோது வாங்கிய கடனுக்கான வட்டியையும் செலுத்தி வருகிறோம். ஆண்டுதோறும் ரூ.400 கோடியை வட்டியாக செலுத்தி வருகிறோம்.

மத்தியில் ஆட்சிமாற்றம் வந்தால்தான் புதுச்சேரிக்கு விடிவுகாலம் பிறக்கும். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்றது. இவை மூன்றும் பாரதீய ஜனதா கட்சி ஆண்ட மாநிலங்கள். மக்கள் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் பேசியதாவது:-
புதுவை மாநிலத்தின் கவர்னராக உள்ள கிரண்பெடி நமக்கு பல சங்கடங்களை உருவாக்கி வருகிறார். நாங்கள் பதவியேற்றபோது இலவச அரிசி, முதியோர் பென்ஷன், சென்டாக் கல்வி நிதி வழங்கும் திட்டங்களை எந்த காலகட்டத்திலும் செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

இருந்தாலும் பல்வேறு பிரச்சினைகளினால் இலவச அரிசி வழங்க முடியவில்லை. ஆனாலும் அதற்கான பணத்தை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்தினோம். மக்களின் விருப்பப்படி இலவச அரிசி வழங்கவும் நடவடிக்கை எடுக்கிறோம்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது புதுவை மாநிலத்துக்கு தேவையான நிதி கிடைத்தது. கஜா புயலுக்கான நிவாரணமாக மத்திய அரசு இன்னும் ஒரு பைசாகூட வழங்கவில்லை. இடைக்கால நிவாரணம் கூட வழங்கவில்லை. இந்த நிலை மாறவேண்டும். இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், பிரதமர் மோடி ரிமோட் கண்ட்ரோல் மூலம் கவர்னர் கிரண்பெடியை இயக்குவதாக குற்றஞ்சாட்டினார். மாநில அந்தஸ்து கேட்டும், கவர்னர் கிரண்பெடி வெளியேறக்கோரியும் வருகிற 4-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், புதுவை மக்களின் நலனுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, எம்.என்.ஆர்.பாலன், விஜயவேணி, காங்கிரஸ் நிர்வாகிகள் நீல.கங்காதரன், ஏ.கே.டி.ஆறுமுகம், பெத்தபெருமாள், கே.எஸ்.பி.ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story