பட்டாசு ஆலைகளை திறந்து தயாரிப்பை தொடங்கலாம் - விருதுநகர் கலெக்டர் அறிக்கை


பட்டாசு ஆலைகளை திறந்து தயாரிப்பை தொடங்கலாம் - விருதுநகர் கலெக்டர் அறிக்கை
x
தினத்தந்தி 24 Dec 2018 10:15 PM GMT (Updated: 24 Dec 2018 11:22 PM GMT)

பேரியம் உப்பு இல்லாமல் 50 சதவீதம் பட்டாசு ரகங்களை தயாரிக்க வாய்ப்பு உள்ளதால் மூடப்பட்ட ஆலைகளை உடனடியாக திறந்து பட்டாசு தயாரிப்பை தொடங்கலாம் என்று கலெக்டர் சிவஞானம் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர், 

கடந்த நவம்பர் 10-ந்தேதி மாவட்ட வருவாய் அதிகாரி பட்டாசு ஆலைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், பட்டாசு உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்திய நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் கடந்த 21-ந்தேதி பல்வேறு தரப்பிலான பட்டாசு தொழிலில் ஈடுபட்டுவரும் பணியாளர்கள் பட்டாசு ஆலைகளை மூடியிருப்பதை கண்டித்தும், அவைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தியதுடன், மனுக்களும் அளித்தனர். அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தீர்ப்பில் சரவெடிகள் தயாரிப்பதும், வேதிப்பொருளான பேரியம் உப்பு பயன்படுத்தி பட்டாசு தயாரிப்பது மட்டுமே முற்றிலும் தடைசெய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை பேரியம் உப்பு பயன்படுத்தாமல் ராக்கெட், ரோல்கேப், பொட்டு வெடி, அணுகுண்டு, லட்சுமி வெடி, குருவி வெடி, சிவப்பு கம்பி மத்தாப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் தீப்பெட்டி மத்தாப்பு உள்ளிட்ட பட்டாசு ரகங்கள் தயாரிக்க வாய்ப்புள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது. இதன்மூலம் தற்போது தயாரிக்கப்படும் பட்டாசு ரகங்களில் 40 முதல் 50 சதவீத பட்டாசு ரகங்களை பேரியம் உப்பு என்ற மூலப்பொருள் இல்லாமல் தயாரிக்க முடியும் என வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

எனவே அனைத்து பட்டாசு ஆலைகளும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளபடி மேற்கண்ட பட்டாசு ரகங்களை தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். பட்டாசு தொழிலாளர்களின் நலன் கருதி உடனடியாக பட்டாசு ஆலைகளை திறந்து செயல்படலாம். மேலும் சுப்ரீம் கோர்ட்டு இறுதித்தீர்ப்பு வரை காத்திருக்காமல் இடைக்கால தீர்ப்பின்படி உடனடியாக செயல்படலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story