ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து கருப்பு நிறத்தில் நுரையுடன் சென்ற சாயக்கழிவுநீர் - விவசாயிகள் அதிர்ச்சி


ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து கருப்பு நிறத்தில் நுரையுடன் சென்ற சாயக்கழிவுநீர் - விவசாயிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 25 Dec 2018 3:45 AM IST (Updated: 25 Dec 2018 5:11 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து கருப்பு நிறத்தில் நுரையுடன் சாயக் கழிவு நீர் சென்றதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

காங்கேயம்,

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகியாகும் நொய்யல் ஆறு, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து காவிரியில் கலக்கிறது. ஒரு காலத்தில் ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடிக்கொண்டிருந்த நொய்யல் ஆறு, காலப்போக்கில் வறட்சி, மழை குறைவு போன்ற காரணங்களால் ஆற்றில் நீர் வரத்து குறைந்தது. பின்னர் கடும் வறட்சி நிலவி வந்த நிலையில் ஆற்றில் தண்ணீர் முற்றிலும் நின்றுபோனது. இதற்கிடையில் திருப்பூரில் பனியன் நிறுவனங்களின் வளர்ச்சியாலும், முறையான சாக்கடை வசதி இல்லாததாலும், நொய்யல் ஆறு சாக்கடை நீரின் வடிகாலாக மாறிப்போனது. மேலும் சாயக்கழிவு நீரையும் ஆற்றில் கலந்து விடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் சமீப காலமாக மழை பெய்யும்போது, ஆற்றில் வரும் வெள்ளத்தோடு, சாயக்கழிவு நீரையும் திறந்து விடுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கிறார்கள்.

குறிப்பாக விடுமுறை நாட்களில், இரவு நேரத்தில் சாயக்கழிவு நீரை ஆற்றில் திறந்து விடுவதால், நொய்யல் ஆற்று நீர் கருப்பு நிறத்தில் நுரையுடன் செல்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் காங்கேயத்தை அடுத்துள்ள ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து கருப்பு நிறத்தில் நுரையுடன் சாயக்கழிவு வெளியேறியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:-

நொய்யல் ஆற்றில் ஒரு சொட்டு கூட சாயக்கழிவு நீரை விடக் கூடாது என்று நீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. சாய நீரை வெளியேற்றும் சாய ஆலைகள் மூடப்பட்டு விட்டது என்கிறார்கள். ஆனால், அணைக்கு சாயக் கழிவு நீர் வந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஒரத்துப்பாளையம் அணையின் தற்போதைய தண்ணீரை விவசாயத்துக்கு பாய்ச்ச முடியாது. முதலில் சாயக்கழிவு நீர் நொய்யலில் கலப்பது முற்றிலுமாக தடுக்க வேண்டும்.

முத்தூர் அருகே ரூ.8 கோடி செலவில் கட்டப்பட்ட சின்னமுத்தூர் தடுப்பணையின் மூலம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவில் பாசனம்பெறும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறிப்போனதோடு பாசனத்துக்கு வெட்டப்பட்ட வாய்க்கால்களும் காட்சி பொருளாக உள்ளன.

அதிகாரிகள் சாய ஆலைகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் இது குறித்து கண்காணிக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story