கல்லிடைக்குறிச்சி அருகே ஊருக்குள் சிறுத்தைப்புலி நடமாடியதாக பரபரப்பு பொதுமக்கள் அச்சம்
கல்லிடைக்குறிச்சி அருகே ஊருக்குள் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அம்பை,
கல்லிடைக்குறிச்சி அருகே ஊருக்குள் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சிறுத்தைப்புலி நடமாட்டம்
நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா கல்லிடைக்குறிச்சி– மணிமுத்தாறு மெயின் ரோட்டில் அமைந்துள்ளது பொன்மாநகர். இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சிறுத்தைப்புலி நடமாடியதாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் சிறுத்தைப்புலியை சிலர் நேரில் பார்த்ததாகவும், ஆட்டின் கழுத்தை சிறுத்தைப்புலி கடித்து குதறியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து அம்பை வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அம்பை வனச்சரகர் கார்த்திக்கேயன் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் நேற்று காலை பொன்மாநகர் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அச்சம் அடைய வேண்டாம்
பின்னர் இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், “பொன்மாநகர் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. ஆட்டின் கழுத்தை கடித்து குதறியிருப்பது சிறுத்தைப்புலி இல்லை. நாய் தான் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் அச்சம் அடைய வேண்டாம். இருப்பினும் தானியங்கி கேமராக்கள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படும்” என்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story