அரசூர் கூட்டுசாலையில் விபத்தை தடுக்க ஒளிரும் மின்விளக்குகள் - வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. இயக்கி வைத்தார்
அரசூர் கூட்டுசாலையில் விபத்தை தடுக்க ஒளிரும் மின்விளக்குகளை வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. இயக்கி வைத்தார்.
அரசூர்,
தமிழகத்திலேயே விழுப்புரம் மாவட்டம் அதிக தூரம் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளை கொண்ட மாவட்டமாகும். இதனால் இம்மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகளவில் நடக்கிறது. விபத்துகளை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அரசூர் கூட்டுசாலை பகுதியில் தொடரும் விபத்துகளை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பில் ஒளிரும் மின்விளக் குகள் அமைக்கப்பட்டது.
இதனை நேற்று காலை வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. நாகராஜ் இயக்கி வைத்து அவை செயல்படும் விதம் குறித்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவில் விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் ‘மொபைல்’ பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்துகள் குறைந்துள்ளது. மேலும் தொடர் விபத்துகள் நடந்து வரும் முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு விபத்துகளை குறைக்கும் வகையில் ஒளிரும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் 500 மீட்டர் தூரத்தில் வரும் முன்பே வேகத்தை குறைத்து இயக்க வாய்ப்பு உண்டு. இந்த ஒளிரும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டதன் மூலம் கண்டிப்பாக விபத்துகள் குறையும். விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையின் துரித நடவடிக்கையால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத்து எண்ணிக்கை குறைந்து உயிரிழப்பு எண்ணிக்கையும் 275 ஆக குறைந்துள்ளது என்றார். அப்போது விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேந்திரன், சங்கர், இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story