தொடர் விடுமுறை எதிரொலி: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை எதிரொலியாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஊட்டி,
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி, சிறந்த கோடை வாசஸ்தலமாக திகழ்கிறது. இங்கு நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து, செல்கின்றனர். பள்ளிக்கூடங்களில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்ததால், கடந்த சில வாரங்களாக நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவாக இருந்தது. இதனால் முக்கிய சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி கிடந்தன.
இந்த நிலையில் தேர்வுகள் முடிந்து மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டமும் தொடங்கியது. இந்த தொடர் விடுமுறை எதிரொலியாக நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர்.
இதனால் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சிமுனை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஊட்டி கமர்சியல், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மற்றும் சேரிங்கிராஸ், மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த பிறகே நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் உள்ள சூட்டிங்மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. தொடர் விடுமுறையால் நீலகிரி மாவட்டத்தில் சீசன் தற்போது களை கட்டி உள்ளது. இதனால் குதிரை சவாரி தொழில், கம்பளி ஆடைகள் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் விடுதிகள், ஓட்டல்களில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
குன்னூர் சிம்ஸ்பார்க், லேம்ஸ்ராக் காட்சிமுனை, கோத்தகிரி பூங்கா மற்றும் கூடலூர் ஊசிமலை காட்சி முனை, நடுவட்டம் ஆங்கிலேயர் கால சிறைச்சாலை, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் கூடலூர்- ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து சென்று, வருவதை காண முடிகிறது. இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, நீலகிரியில் இரவில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பகல் நேரத்தில் குளிர்ந்த மிதமான காலநிலை நிலவுகிறது.
இதனால் குளு, குளு சீசனை குடும்பத்துடன் அனுபவிக்க முடிகிறது என்று மகிழ்ச்சியுடன் கூறினர். சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து உள்ளதால், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story