தாயை குத்தி கொன்ற கல்லூரி மாணவி: ஆந்திராவில் பதுங்கி இருந்த காதலன் சிக்கினார்


தாயை குத்தி கொன்ற கல்லூரி மாணவி: ஆந்திராவில் பதுங்கி இருந்த காதலன் சிக்கினார்
x
தினத்தந்தி 26 Dec 2018 5:30 AM IST (Updated: 26 Dec 2018 12:07 AM IST)
t-max-icont-min-icon

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை கல்லூரி மாணவி குத்திக்கொன்ற கொடூர சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட மாணவியின் காதலன் ஆந்திராவில் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சனேயபுரம் 8-வது தெருவை சேர்ந்தவர் திருமுருகநாதன் (வயது 52). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி பானுமதி (50). மகள்கள் சாமுண்டீஸ்வரி (26), தேவிபிரியா (19). இவர்களில் தேவிபிரியா திருவள்ளூரை அடுத்த இந்து கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சாமுண்டீஸ்வரி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் கடந்த 7 மாதங்களாக தேவிபிரியா தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (24) என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்குள் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. சுரேஷ் கர்நாடகா மாநிலம் மைசூருவில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். தேவிபிரியாவின் காதல் விவகாரம் தெரிய வந்ததும் அவரது வீட்டில் உள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தேவிபிரியா தன்னை வந்து அழைத்து செல்லுமாறு காதலன் சுரேசிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் தன்னால் தற்போது வரமுடியாது என்று கூறி தனது நண்பர்களான கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரை சேர்ந்த 18 வயது சிறுவன், திருபுவனத்தை சேர்ந்த 18 வயது சிறுவன்ஆகியோரை தேவிபிரியா வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அப்போது சாமுண்டீஸ்வரி, பானுமதி வீட்டில் இருந்தனர். தேவிபிரியா தனது துணிமணிகளுடன் சதீஷ், விக்னேஷ் ஆகியோருடன் செல்ல முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாயார் பானுமதி தனது மகளை கண்டித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் தேவிபிரியா கத்தியால் தாயின் வயிறு, கழுத்து, மார்பு பகுதிகளில் சரமாரியாக குத்தினார். உடன் இருந்த சிறுவர்கள் இருவரும் அவரது வாயை கட்டி பொத்தி இறுக பற்றிக்கொண்டனர். பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

தப்பியோடிய அவர்கள் இருவரும் காக்களூர் பகுதியில் வழி தெரியாமல் அங்கு கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தவர்களிடம் மெயின் ரோட்டிற்கு செல்லும் வழி எங்கே என கேட்டனர். இருவரது சட்டையிலும் ரத்தக்கறை இருந்ததால் சந்தேகம் அடைந்த வாலிபர்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். இது குறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பலத்த காயமடைந்த பானுமதி சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் பானுமதி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்துபோனார். இது குறித்து சாமுண்டீஸ்வரி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவிபிரியா மற்றும் சிறுவர்கள் இருவரை கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட மாணவி தேவிபிரியாவை போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராக்கிகுமாரி, ஹரிதாஸ் ஆகியோர் தனிப்படை அமைத்து காதலன் சுரேசை தேடி வந்தனர். அவர் ஆந்திர மாநிலம் தடா பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதபாளையம் அடுத்த தடா தொண்டூர் கிராமத்தில் பதுங்கி இருந்த சுரேசை கைது செய்து திருவள்ளூருக்கு நேற்று அழைத்து வந்தனர்.

கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவி தேவிபிரியா போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

எனக்கும் சுரேசுக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடையில் எங்களுக்குள் காதலாக மாறியது. இதை என்னுடைய தாயார் கண்டித்தார்.

இதனால் அடிக்கடி எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை நான் சுரேசிடம் கூறினேன். அதற்கு அவர் உனது தாயார் பானுமதி தடையாக உள்ளதால் அவர் இருக்கும் வரை நம்மால் சேர்ந்து வாழ முடியாது என கூறி அவரை தீர்த்து கட்டினால்தான் நாம் சேர்ந்து வாழ முடியும் என கூறினார்.

இதைத்தொடர்ந்து சுரேஷ் தனது நண்பர்களான இருவரை அனுப்பி வைப்பதாகவும் அவர்கள் மூலம் வீட்டில் கொள்ளை நாடகம் நடத்தி பானுமதியை கொலை செய்து விட்டு தப்பிக்கலாம் என திட்டம் வகுத்து கொடுத்தார். இதற்கு நான் ஒப்புக்கொண்டேன். அதன்படி என்னுடைய தாயாரை கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தேன். இருப்பினும் போலீசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story