செட்டிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரி பொதுமக்கள் சாலை மறியல்


செட்டிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Dec 2018 3:45 AM IST (Updated: 26 Dec 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

செட்டிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் செட்டிகுளம் மற்றும் இதனை சுற்றியுள்ள மலையடிவாரம், பொம்மனப்பாடி, நாட்டார்மங்கலம், மாவிலிங்கை, குரூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செட்டிகுளம் மலை அடிவாரத்தை சேர்ந்த அழகு(வயது 45) என்பவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு மருத்துவர் இல்லாததால் அவரை பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது. அதனால் அவர் பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும் என வலியுறுத்தி செட்டிகுளம் கடைவீதி பகுதியில் துறையூர்- ஆலத்தூர் கேட் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், வருவாய் ஆய்வாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் துறையூர்- ஆலத்தூர் கேட் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Next Story