சிவகங்கையில் 2 குழந்தைகளுடன் பெண்ணை கடத்திய வாலிபர் - திருப்பூரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 2 குழந்தைகளுடன், இளம்பெண்ணை கடத்தி வந்த வாலிபர் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட தனிப்படை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்,
சிவகங்கை மாவட்டம் குமாரபட்டி தமறாக்கி தெற்கு பகுதியை சேர்ந்த ரவி என்பவர், கடந்த நவம்பர் மாதம் 12-ந்தேதி சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், 26 வயதான தனது உறவுக்கார பெண்ணையும், அவருடைய 2 குழந்தைகளையும் கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி இரவு முதல் காணவில்லை என்றும், அவர்களை உடனடியாக கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன தாயையும், 2 குழந்தைகளையும் தேடிவந்தனர். இந்த நிலையில் இளம்பெண் மற்றும் 2 குழந்தைகளையும் அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(வயது 23) என்பவர் கடத்தி சென்று விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இந்த வழக்கை கடத்தல் வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இளம்பெண் மற்றும் அவரின் குழந்தைகளை தினேஷ்குமார் கடத்தி கொண்டு வந்து, திருப்பூரில் தங்க வைத்திருப்பதும், அவரும் இங்கு பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூரில் பதுங்கி இருக்கும் தினேஷ்குமாரை பிடிக்க சிவகங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் வந்தனர்.
பின்னர் அவர்கள் திருப்பூர் போலீஸ் நிலையங்களில் தினேஷ்குமார் குறித்த தகவல்களை கொடுத்துள்ளனர். மேலும், அவர் ஏதாவது பனியன் நிறுவனங்களில் தங்கி இருந்து வேலை செய்கிறாரா? அவரால் கடத்தி வரப்பட்ட அந்த இளம்பெண் மற்றும் அவருடைய குழந்தைகளை எங்கு வைத்துள்ளார்? என்பது குறித்தும் திருப்பூர் போலீசாரின் உதவியுடன் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story