சேலம் அருகே, திருமணம் ஆன 40 நாளில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - காதலரை மறக்க முடியாததால் விபரீதம்


சேலம் அருகே, திருமணம் ஆன 40 நாளில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - காதலரை மறக்க முடியாததால் விபரீதம்
x
தினத்தந்தி 25 Dec 2018 11:00 PM GMT (Updated: 25 Dec 2018 9:56 PM GMT)

சேலம் அருகே காதலரை மறக்க முடியாததால், திருமணம் ஆன 40 நாளில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆட்டையாம்பட்டி,

சேலம் மாவட்டம், வீரபாண்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 32). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கரட்டுபாளையம் பகுதியை சேர்ந்த அர்ச்சனா(19) என்பவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

அப்போது அர்ச்சனா திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். திருமணம் ஆன பிறகு அவர் தனது கணவருடன் வீரபாண்டி கலைஞர் காலனியில் உள்ள வீட்டிலேயே வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள படுக்கை அறையில், விட்டத்தில் தனது துப்பட்டாவால் அர்ச்சனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- அர்ச்சனா ஏற்கனவே தனது தாயாருடன் ஈரோட்டில் வசித்தபோது, அவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த காதல் விவகாரத்தை அறிந்த அவரது தாயார், மகள் அர்ச்சனாவுக்கு அவசர, அவசரமாக தேவராஜை திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்த திருமணம் அர்ச்சனாவுக்கு பிடிக்கவில்லை. மேலும் தான் காதலித்த வாலிபரையும் மறக்க முடியாமல் தவித்து வந்தார். இதனிடையே அவரது காதலர், அவருக்கு செல்போன் வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. அந்த செல்போனில் அவர் காதலருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். அர்ச்சனா செல்போனில் அடிக்கடி யாருடனோ பேசுவதை கண்டு அவருடைய கணவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் அர்ச்சனாவின் தாயாரை அழைத்து விவரங்களை தெரிவித்து கண்டிக்குமாறு கூறி உள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த அர்ச்சனாவின் தாயார், செல்போனை அவரிடம் இருந்து வாங்கினார். அதை யார் வாங்கி கொடுத்தார்? என்று கேட்டபோது, காதலர் வாங்கி கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த செல்போனை அந்த வாலிபருக்கே திருப்பி அனுப்பிய அவர், இனிமேல் எனது மகளிடம் பேச வேண்டாம் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.

இதனிடையே மனதில் ஒருவரை நினைத்துக்கொண்டு வெளியுலகில் வேறு ஒருவருடன் வாழ்வதா? என்று மனக்குழப்பத்தில் இருந்த அந்த மாணவி, காதலரை மறக்க முடியாமல் வாழ்வதை விட ஒரேயடியாக செத்து விடுவதே மேல் என நினைத்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவ்வாறு போலீசார் கூறினர். திருமணம் ஆகி 40 நாட்களே ஆவதால், கல்லூரி மாணவி தற்கொலை சம்பவம் குறித்து சேலம் வருவாய் கோட்டாட்சியர் செழியனும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story