சிதம்பரத்தில் பரபரப்பு: மகளுடன் தாய் தீக்குளிப்பு - போலீசார் தீவிர விசாரணை
சிதம்பரம் அருகே மகளுடன் தாய் தீக்குளித்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிதம்பரம்,
சிதம்பரம் திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் செல்வம். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேகா(வயது 30). இவர்களுக்கு நித்திஷ்(7) என்ற மகனும், நிஷாந்தி(6) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் ரேகா, தனது மகள் நிஷாந்தியுடன் அந்த பகுதியில் உள்ள பிரம்மராயர் கோவில் அருகே, சாலையோரம் உள்ள ஒரு வயல் பகுதிக்கு வந்தார். அப்போது அவர் திடீரென தனது உடலிலும், மகளின் உடலிலும் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். தீ வெப்பம் தாங்க முடியாமல் அவர்கள் அலறினர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடி சென்று தாய், மகள் இருவரின் உடலிலும் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
பின்னர் அவர்களை சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ரேகா அவரது மகளுடன் தீக்குளித்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை? குடும்ப பிரச்சினை காரணமாக ரேகா தனது மகளுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகளுடன், தாய் தீக்குளித்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story