குடியாத்தம் அருகே காட்டு யானைகள் அட்டகாசம் - மாமரங்கள், வாழைத்தோட்டம் சேதம்


குடியாத்தம் அருகே காட்டு யானைகள் அட்டகாசம் - மாமரங்கள், வாழைத்தோட்டம் சேதம்
x
தினத்தந்தி 25 Dec 2018 11:07 PM GMT (Updated: 25 Dec 2018 11:07 PM GMT)

குடியாத்தம் அருகே விவசாய நிலத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து மாமரங்கள், வாழைத்தோட்டத்தை நாசம் செய்தன.

குடியாத்தம்,

குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மோர்தானா, சைனகுண்டா, கொட்டமிட்டா, தனகொண்டபல்லி உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள நிலங்களில் அடிக்கடி காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் இப்பகுதியை ஒட்டியபடி ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் கவுண்டன்ய யானைகள் சரணாலயம் உள்ளது. அங்கிருந்தும் யானைகள் தமிழக எல்லைக்குள் வந்து கிராமப்புற பகுதியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்துகிறது.

குடியாத்தம் அருகே கொட்டமிட்டா கிராமத்தை சேர்ந்த பாபு என்பவருக்கு ஆம்பூரான்பட்டி அருகே மாந்தோப்பு உள்ளது. அந்த தோப்பிற்குள் புகுந்த 11 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் 40 மாமரங்களை முற்றிலும் சேதப்படுத்தின.

தொடர்ந்து அதே பகுதியில் உள்ள உஸ்மான் என்பவரது மாந்தோப்பிற்குள் புகுந்து 10 மரங்களை நாசமாக்கியது. கொட்டமிட்டா கிராமத்தில் காசி என்பவரின் வாழைத்தோட்டத்தில் புகுந்து 60 வாழை மரங்களை சேதப்படுத்தியது. மேலும் தனகொண்டபல்லி பகுதியில் குத்தூஸ் என்பவருக்கு சொந்தமாக வாழைத்தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த 30 வாழை மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘யானைக்கூட்டம் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி, அட்டகாசம் செய்து வருவதால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்கள் சேதம் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கக்கோரி நீதிமன்றத்தை நாட உள்ளோம்’ என்றனர்.

காட்டுப்பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர், யானைக்கூட்டத்தை ஆந்திர காட்டுப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.


Next Story