பாரதீய ஜனதாவில் கீறல்: மதசார்பற்ற அணிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் நாராயணசாமி பேட்டி


பாரதீய ஜனதாவில் கீறல்: மதசார்பற்ற அணிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 26 Dec 2018 5:12 AM IST (Updated: 26 Dec 2018 5:12 AM IST)
t-max-icont-min-icon

பாரதீய ஜனதாவில் கீறல் விழ தொடங்கிவிட்டது. மதசார்பற்ற அணிகள் ஒருங்கிணைந்து, மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நீர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதல் அவசியம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி நீர் கிடைக்காமல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதுதொடர்பாக புதுவை அரசு சார்பில் மத்திய அமைச்சகத்துக்கு கடிதமும் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்க மத்திய நீர்வளத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளது. அதற்கு அமைச்சகமும், புதுவை, தமிழக மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் அனுமதி அளித்து உள்ளது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து கடந்த 8 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது. இதற்கான முழுப்பொறுப்பை மத்திய அரசும், கர்நாடக அரசும் தான் ஏற்க வேண்டும்.

புதுவை சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல் மத்திய மந்திரி நிதின் கட்காரியிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேகதாதுவில் அணை கட்டும் திட்ட வரையறைக்கு அனுமதியளித்துள்ளது விதிமுறைகளுக்கு ஏற்றதல்ல. இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது எனவும் கூறினேன். காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையத்தை கூட்டி சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை செயலாளர்களை அழைத்து பேசுவதாக உறுதி அளித்தார்.

புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட இந்த முடிவு என்பது 2 மாநில விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். உடனடியாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர், காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டி மாநில பொதுப்பணித்துறை செயலாளர்களை அழைத்து உரிய தீர்வு காண வேண்டும்.

கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக பிரகடனப்படுத்தினார். இதனை அரசியல் கட்சிகளும், பத்திரிகையாளர்களும் சர்ச்சையாக்கி உள்ளனர். ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு, அவருடைய கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யும் அதிகாரம் உண்டு. அதன்படி அவர் பிரதமர் வேட்பாளரை அறிவித்துள்ளார். அவரது கருத்தை இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை அங்கீகரித்துள்ளது.

மதசார்பற்ற அணியின் நோக்கம் மத்தியில் உள்ள சர்வாதிகார மோடியின் ஆட்சியை அகற்றுவதே. எங்களது அணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை தேர்தல் முடிந்தபிறகு கூட்டணி கட்சிகள் சேர்ந்து அறிவிப்போம் என ராகுல்காந்தி தெளிவாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

பாரதீய ஜனதா கட்சியில் கீறல் விழ ஆரம்பித்துள்ளது. பிரதமர் மோடியை பதவியில் இருந்து இறக்கிவிட்டு, நிதின் கட்காரியை அறிவிக்கலாம் என எம்.பி. ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு வலு சேர்க்கும் விதமாக நிதின் கட்காரி, தேர்தலில் தோல்வியடைந்தால் அதற்கு தலைமையேற்போர் பதவி விலக வேண்டும் என கூறி உள்ளார்.

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோடி. கண்டிப்பாக 2019-ல் மிகப்பெரிய மாற்றம் நாட்டில் ஏற்படும். அனைத்து தரப்பு மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய, மதசார்பற்ற அணிகள் ஒருங்கிணைந்து, மத்தியில் ஆட்சியமைக்கும்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும், கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த போராட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story