தூத்துக்குடியில் கடல் வழியாக ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை
தூத்துக்குடியில் கடல் வழியாக ஊடுருவலை தடுப்பதற்கான பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கடல் வழியாக ஊடுருவலை தடுப்பதற்கான பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடந்தது.
கண்காணிப்புதமிழக கடலோர பகுதிகளில் கடத்தல், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் உருவாக்கப்பட்டு உள்ளது. கடலோர பாதுகாப்பு போலீசார் கடல் பகுதியில் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது, கடத்தல், ஊடுருவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஆபரேசன் ‘சஜாக்‘ என்னும் பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. கடலோர பாதுகாப்பு போலீசார், சுங்கத்துறை, மீன்வளத்துறையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில், சப்–இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், ஜானகிராமன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் படகுகளில் ரோந்து சென்றனர். அவர்கள் தீவு பகுதிகளில் யாரேனும் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
சோதனைமீனவர்களின் படகுகளையும் முழுமையாக சோதனை செய்தனர். மீனவர்கள் உரிய அடையாள அட்டை வைத்து உள்ளார்களா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர். கடற்கரையை இணைக்கக்கூடிய சாலைகளிலும் சோதனைச்சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.