கரிவலம்வந்தநல்லூர் அருகே பஞ்சு கிட்டங்கிக்கு தீவைத்த தொழிலாளி கைது
கரிவலம்வந்தநல்லூர் அருகே பஞ்சு கிட்டங்கிக்கு தீவைத்த வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
சங்கரன்கோவில்,
கரிவலம்வந்தநல்லூர் அருகே பஞ்சு கிட்டங்கிக்கு தீவைத்த வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
நூற்பாலைக்கு தீவைப்புநெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பருவக்குடி முக்குரோட்டில் ராஜபாளையத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இங்கு 500–க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பஞ்சுகளை சேமித்து வைப்பதற்கான சேமிப்பு கிட்டங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சு கிட்டங்கியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சு மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நூற்பாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வாலிபர் ஒருவர் பஞ்சுகளுக்கு தீ வைப்பது தெரியவந்தது.
தொழிலாளி கைதுஇதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் அதே நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் பிள்ளையார்குளத்தை சேர்ந்த முத்துக்குமார் (வயது 32) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நூற்பாலையில் அதிக நேரம் வேலை வாங்கிக் கொண்டு குறைந்த சம்பளம் வழங்கி வருவதாகவும், சம்பவத்தன்று அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, பணி தொடர்பாக மேற்பார்வையாளரிடம் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் பஞ்சு கிட்டங்கிக்கு தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர்.