எந்த தவறும் செய்யாத எனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது: எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்த காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டிடம், கர்ப்பிணி புகார்


எந்த தவறும் செய்யாத எனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது: எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்த காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டிடம், கர்ப்பிணி புகார்
x
தினத்தந்தி 27 Dec 2018 3:30 AM IST (Updated: 26 Dec 2018 10:21 PM IST)
t-max-icont-min-icon

தனக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்த காரணமான டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எந்த தவறும் செய்யாத எனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறி 9 மாத கர்ப்பிணி, விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனிடம் புகார் அளித்தார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் மனைவி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இன்னும் சில வாரங்களில் தனது 2-வது குழந்தையை பெற்றெடுக்க இருக்கும் அவருக்கு திடீர் கொடுமை நேர்ந்தது. உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவருக்கு, எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை ஏற்றிய விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த கர்ப்பிணி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த கர்ப்பிணி நேற்று விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனை சந்தித்து புகார் அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எனக்கு 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3-ந்தேதி சிகிச்சைக்கு சென்றேன். அங்கு என்னை பரிசோதித்த பெண் டாக்டர், “எனக்கு ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி ரத்தம் செலுத்த வேண்டும்“ என்றார்.

அது சம்பந்தமாக எனது கணவரிடம் ஒரு கடிதத்தை கொடுத்து சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த சேமிப்பு வங்கியில் இருந்து ரத்தம் பெற்று வருமாறு கூறினார். அதன்படி எனது கணவர் ரத்தம் பெற்று வந்தவுடன் அன்றே எனக்கு ரத்தம் செலுத்தப்பட்டது.

ரத்தம் செலுத்தப்பட்ட சிறிது நேரத்தில் எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. நான் டாக்டர்களிடம் தெரிவித்தபோது, ரத்தம் செலுத்தினால் அப்படித்தான் இருக்கும் என கூறினர். கடந்த 5-ந்தேதி என்னை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். ஆனால் வீட்டுக்கு சென்ற உடன் எனக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் கடந்த 17-ந் தேதி மீண்டும் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அங்கு என் ரத்தத்தை பரிசோதித்த டாக்டர் பதில் ஏதும் கூறாமல், என்னை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துவிட்டார். அங்கு என்னை பரிசோதித்த டாக்டர்கள், எனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

எனக்கும், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதால் எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது. நான் எந்த தவறும் செய்யாத நிலையில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமுதாயத்தில் என்னை தவறாக நினைப்பார்கள். என் குடும்ப கவுரவத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே எனக்கு இந்த பாதிப்பை ஏற்படுத்தியதற்கு மூலக்காரணமாக இருந்தவர்கள் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களும், சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ரத்த சேமிப்பு வங்கி பணியாளர்களும்தான். அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அந்த கர்ப்பிணியும், அவருடைய கணவரும் கலெக்டர் அலுவலகம் வந்து மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமாரிடமும், சாத்தூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்க கோரியும், பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விருதுநகரில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதே போல் அந்த கர்ப்பிணியின் உறவினர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலக வாசலில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story