கடம்பூர் அருகே விவசாயியை யானை மிதித்து கொன்றது காவலுக்கு சென்றபோது பரிதாபம்


கடம்பூர் அருகே விவசாயியை யானை மிதித்து கொன்றது காவலுக்கு சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 27 Dec 2018 2:45 AM IST (Updated: 26 Dec 2018 11:50 PM IST)
t-max-icont-min-icon

கடம்பூர் அருகே காவலுக்கு சென்ற விவசாயியை யானை மிதித்து கொன்றது.

டி.என்.பாளையம், 


சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் உள்ள மலைவாழ் மக்கள் பெரும்பாலும் மானாவாரி பயிரான மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு ஆகியவை சாகுபடி செய்துள்ளனர். தற்போது கடம்பூர் வனத்தையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.

இதனால் கிராம மக்கள் இரவு நேரத்தில் தோட்டத்து காவலுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் கடம்பூர் அணைகரையைச் சேர்ந்த விவசாயியான மாதேவப்பா (வயது 59) தனது உறவினர் தோட்டத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து உள்ளார். இதனால் அவர் தோட்டத்தில் இரவு நேரத்தில் தங்கி காவல் காத்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு மாதேவப்பா தோட்டத்துக்கு காவலுக்கு சென்றார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒன்று அந்த தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் அந்த யானை மரவள்ளிக்கிழங்குகளை நாசப்படுத்தியது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாதேவப்பா தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பரணில் இருந்து கீழே இறங்கினார். இதை கவனித்த யானை அவரை விரட்டியதுடன், துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. இதனால் அவர் சத்தம் போட்டு அலறினார். மேலும் அந்த யானை ஆக்ரோஷமாக சென்று மாதேவப்பாவை மிதித்தது.

இதற்கிடையே யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயிகள் மாதேவப்பா தோட்டத்தை நோக்கி ஓடினர். அப்போது அந்த தோட்டத்தில் யானை நிற்பதை கண்டதும் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்தும், தகர டப்பாக்கள் மூலம் ஒலி எழுப்பியும் யானையை காட்டுக்குள் விரட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் மாதேவப்பாவின் அருகே சென்றனர். அப்போது அவர், யானை மிதித்ததில் இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கடம்பூர் போலீசாருக்கும், சத்தியமங்கலம் வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாதேவப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யானை மிதித்ததில் இறந்த மாதேவப்பாவுக்கு பசுவம்மா என்ற மனைவியும், ஜடேசாமி என்ற மகனும், அம்பிகா என்ற மகளும் உள்ளனர்.

Next Story