தரங்கம்பாடியில் சுனாமி நினைவு நாள் அஞ்சலி-அமைதி ஊர்வலம் - பவுன்ராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்பு
தரங்கம்பாடியில் சுனாமி நினைவு நாள் அஞ்சலி-அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பவுன்ராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
பொறையாறு,
நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் 2004-ம் ஆண்டு சுனாமி பேரலையால் 320 பேர் இறந்தனர். 14-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாளையொட்டி நேற்று தரங்கம்பாடியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மீனவ பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் பவுன்ராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் தரங்கம்பாடி கடலில் பால் ஊற்றி, சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அங்குள்ள மீன் விற்பனை கூடத்தில் இருந்து புறப்பட்ட அமைதி ஊர்வலம் ராஜவீதி, ராணிவீதி வழியாக சென்று காமராஜர் சாலையில் உள்ள சுனாமி நினைவு இடத்திற்கு சென்றது. அங்குள்ள சுனாமி நினைவு தூணில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து தரங்கம்பாடி பழைய ரெயிலடி அருகே சுனாமியால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மீனவ பஞ்சாயத்தார்கள், இறந்தவர்களின் குடும்பத்தினர், பவுன்ராஜ் எம்.எல்.ஏ., தி.மு.க. நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ. அருட்செல்வன், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் அமுர்தவிஜயகுமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செந்தமிழன், ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனம் மற்றும் அரசியல் கட்சியினர், பஞ்சாயத்து நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள், மாணவ-மாணவிகள் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, வெள்ளகோவில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சந்திரபாடி, சின்னூர்பேட்டை ஆகிய மீனவ கிராமங்களிலும் மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தரங்கம்பாடி தாலுகா பகுதியில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஒரு நாள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
பூம்புகார் மீனவர் கிராமத்தில் சுனாமி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பூம்புகாரில் உள்ள சுனாமி நினைவு தூணுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் பவுன்ராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நினைவு தூணுக்கு மலர் வளையம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். முன்னதாக பூம்புகார் கடைத்தெருவில் இருந்து சுனாமி நினைவு மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை, வெள்ளையன், பால் கூட்டுறவு சங்க தலைவர் பாலு மற்றும் கிராம மக்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் பூம்புகாரில் தி.மு.க. சார்பில் சுனாமி நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்துப்பட்டது.
Related Tags :
Next Story