மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் 970 பேர் வேலை நிறுத்தம் - பணிகள் முடங்கின


மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் 970 பேர் வேலை நிறுத்தம் - பணிகள் முடங்கின
x
தினத்தந்தி 26 Dec 2018 10:15 PM GMT (Updated: 26 Dec 2018 7:03 PM GMT)

தேனி மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் 970 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வங்கிப் பணிகள் முடங்கின.

தேனி,

சம்பள உயர்வு கேட்டும், பொதுத்துறை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த 21-ந்தேதி நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வுக்கான விதிகளை தளர்த்த வேண்டும். வங்கி ஊழியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். தேனி மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

மாவட்டத்தில் மொத்தம் 126 பொதுத்துறை வங்கி கிளைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1,180 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 970 பேர் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகள் பூட்டப்பட்டு இருந்தன.

வங்கிப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. காசோலை பண பரிவர்த்தனை, நகைகள் திருப்புதல், கடன் தொகை செலுத்துதல், கடன் பெறுதல் உள்பட அனைத்து பணிகளும் முடங்கின. இதனால், வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர்.

Next Story