மகளின் பிறந்தநாளை கொண்டாட சென்ற போது பரிதாபம்: அரசு பஸ் மோதி அரிசி ஆலை ஊழியர் பலி


மகளின் பிறந்தநாளை கொண்டாட சென்ற போது பரிதாபம்: அரசு பஸ் மோதி அரிசி ஆலை ஊழியர் பலி
x
தினத்தந்தி 27 Dec 2018 3:45 AM IST (Updated: 27 Dec 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

மகளின் பிறந்தநாளை கொண்டாட சென்ற போது, அரசு பஸ் மோதி அரிசி ஆலை ஊழியர் இறந்தார்.

ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா டி.கீழையூரை சேர்ந்தவர் செல்வமணி (வயது 48). இவர் திருச்சி மாவட்டம் மணிகண்டத்தில் உள்ள அரிசி ஆலையில் தங்கி ஊழியராக வேலைபார்த்து வந்தார். வாரத்திற்கு ஒருமுறை மட்டும் ஊருக்கு செல்வது வழக்கம். செல்வமணியின் மகள் கவிதாவுக்கு நேற்று பிறந்த நாள். இதனை கொண்டாட அவர் உறவினர்களை அழைத்து இருந்தார். ஏராளமான உறவினர்களும் வந்தனர்.

இந்நிலையில் செல்வமணி நேற்று காலையில் அரிசி ஆலையில் விடுமுறை எடுத்துவிட்டு, அங்கு இருந்து மோட்டார் சைக்கிளில் கீழையூருக்கு வந்து கொண்டிருந்தார். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மாத்தூர் போலீஸ் நிலையம் அருகே கைனாங்கரை என்ற இடத்தில் வந்தபோது, திருச்சியில் இருந்து தேவகோட்டை நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக செல்வமணி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது.

இதில் கீழே விழுந்த செல்வமணி மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் சிவகங்கையைச் சேர்ந்த முருகன் (43) என்பவரை கைது செய்தனர். மகள் பிறந்த நாள் அன்று செல்வமணி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story