தனியார் பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது: பெங்களூரு என்ஜினீயரிங் மாணவர் உடல்கருகி சாவு - காப்பாற்ற முயற்சிக்காமல் செல்போனில் படம் பிடித்த சோகம்


தனியார் பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது: பெங்களூரு என்ஜினீயரிங் மாணவர் உடல்கருகி சாவு - காப்பாற்ற முயற்சிக்காமல் செல்போனில் படம் பிடித்த சோகம்
x
தினத்தந்தி 26 Dec 2018 9:30 PM (Updated: 26 Dec 2018 8:26 PM)
t-max-icont-min-icon

தனியார் பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதில் பெங்களூரு என்ஜினீயரிங் மாணவர் உடல்கருகி இறந்தார். அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் அப்பகுதி மக்கள் செல்போனில் படம் பிடித்த சோகம் நடந்து உள்ளது.

கோலார் தங்கவயல்,

பங்காருபேட்டையில், தனியார் பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதில் பெங்களூரு என்ஜினீயரிங் மாணவர் உடல்கருகி இறந்தார். அவரை காப்பாற்ற முயற்சிக்காமல் அப்பகுதி மக்கள் செல்போனில் படம் பிடித்த சோகம் நடந்து உள்ளது.

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை டவுன் கே.இ.பி. ரோட்டில் வசித்து வருபவர் குமரேசன். உர வியாபாரி. இவரது மகன் நீரஜ்(வயது 21). இவர் பெங்களூருவில் தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.18 லட்சத்துக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி இருந்தார்.

இந்த நிலையில் கல்லூரியில் பருவதேர்வையொட்டி விடுமுறை விடப்பட்டது. இதனால் கடந்த 3 தினங்களுக்கு முன்பு நீரஜ் பங்காருபேட்டைக்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு நீரஜ் தனது மோட்டார் சைக்கிளில் கோலாருக்கு சென்று கொண்டு இருந்தார். பங்காருபேட்டை-கோலார் மெயின் ரோட்டில் ரெயில்வே கேட் அருகே சென்ற போது அந்த சாைலயில் எதிரே கோலாரில் இருந்து பங்காருபேட்டை நோக்கி சென்ற தனியார் பஸ் வந்தது. இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள், மீது தனியார் பஸ் மோதியது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்கர் வெடித்து சிதறியது. இதனால் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதில் நீரஜின் உடலில் தீப்பற்றி எரிந்தது. அவர் சாலையில் விழுந்து உயிருக்கு போராடினார். அப்போது அப்பகுதி மக்கள், நீரஜை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை. மாறாக அவர் உடலில் தீ பிடித்து எரிந்ததை செல்போனில் படம் எடுத்து கொண்டு இருந்தனர். இந்த நிலையில் சிறிது நேரத்தில் உடல் கருகி நீரஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பங்காருபேட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நீரஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பங்காருபேட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து வாலிபர் உடல்கருகி இறந்த சம்பவம் பங்காருபேட்டையில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story