ஈரோடு மாவட்டத்தில் வங்கி ஊழியர்-அதிகாரிகள் 2,200 பேர் வேலைநிறுத்தம் ரூ.800 கோடி வர்த்தகம் பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் 2,200 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.800 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
ஈரோடு,
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை நிர்வாகம், சிக்கன நடவடிக்கை உள்பட பல்வேறு காரணங்களை கூறி மத்திய அரசு இணைத்து வருகிறது. அதன்படி தற்போது, பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய வங்கிகளை இணைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பொது துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது.
தேவையற்ற வங்கி சீர்திருத்தங்களை கைவிட வேண்டும். வங்கிகளில் உள்ள வராக்கடன்களை வசூல் செய்ய கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் வராக்கடன்கள் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும்.
வேண்டும் என்றே வங்கிக்கடனை திருப்பி செலுத்தாததை கிரிமினல் குற்றமாக அறிவித்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 2 ஆயிரத்து 200 பங்கேற்றனர்.
இதனால் நேற்று மாவட்டம் முழுவதும் 270 வங்கி கிளைகள் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் வங்கிகள் மூலம் எந்தவித பணப்பரிவர்த்தனையும் மேற்கொள்ள முடியாமல் கடந்த 2 நாட்களாக மிகவும் சிரமப்பட்டனர். மேலும் பல ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட்டு கிடந்ததால் பொதுமக்கள் பணம் எடுக்கவும் முடியவில்லை. இதனால் ஈரோடு மாவட்டத்தில் ரூ.800 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி தலைமை கிளையில் அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டமும் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.கணேஷ் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாக்கியகுமார், வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட தலைவர் செல்வம், வங்கி ஊழியர் சங்க பொறுப்பாளர் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில் கலந்து கொண்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் நரசிம்மன் மற்றும் சந்திரசேகரன், சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story