பல்லாவரம் அருகே தேவாலயத்தில் அடுக்கு கல்லறை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு இறந்தவர் உடலை வருவாய்த்துறையினர் அப்புறப்படுத்தினர்


பல்லாவரம் அருகே தேவாலயத்தில் அடுக்கு கல்லறை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு இறந்தவர் உடலை வருவாய்த்துறையினர் அப்புறப்படுத்தினர்
x
தினத்தந்தி 27 Dec 2018 3:30 AM IST (Updated: 27 Dec 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் உள்ள தேவாலயத்தில் அடுக்கு கல்லறை அமைத்து இறந்தவர் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு புதைக்கப்பட்ட உடலை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அப்புறப்படுத்தினர்.

தாம்பரம், 

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் விநாயகர் கோவில் தெருவில் ஒரு தேவாலயம் உள்ளது. கடந்த 18-ந்தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்த பம்மலை சேர்ந்த லோனப்பன்(வயது 72) என்பவரது உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர், தாம்பரம் கோட்டாட்சியர் மற்றும் பல்லாவரம் தாசில்தார் அலுவலகத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து நேற்று மாலை வருவாய்த்துறையினர் மற்றும் சங்கர் நகர் போலீசார் அந்த தேவாலயத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது தேவாலயத்தின் பின்பகுதியில் உள்ள அறையில் உடல்களை உள்ளே வைத்து அடக்கம் செய்யும் வகையில் அடுக்கு கல்லறை கட்டப்பட்டு இருந்தது.

அதில் லோனப்பன் உடலை வைத்து சிமெண்டால் பூசியதும் தெரியவந்தது. அந்த பகுதியை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளதால் இங்கு அடுக்கு கல்லறை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து தேவாலய நிர்வாகிகளிடம், உரிய அனுமதி இல்லாமல் இறந்த உடல்களை புதைக்கக்கூடாது என வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் அந்த அடுக்கு கல்லறையில் இருந்து லோனப்பன் உடலை போலீசார் மற்றும் வருவாய்த் துறையி னர் வெளியில் எடுத்து அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த உடலை பொழிச்சலூர் பகுதியில் வழக்கமாக கிறிஸ்தவர்கள் அடக்கம் செய்யும் கல்லறைக்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், உரிய அனுமதி இல்லாமல் அடுக்கு கல்லறைகள் அமைத்து உடல்களை புதைக்கக்கூடாது எனவும் வருவாய்த்துறையினர் எச்சரித்து உள்ளனர். இந்த சம்பவத்தால் பொழிச்சலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story