வல்லம் அருகே, பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி - 2 பேர் படுகாயம்


வல்லம் அருகே, பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி - 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 27 Dec 2018 3:30 AM IST (Updated: 27 Dec 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

வல்லம் அருகே பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

வல்லம், 

தஞ்சையை அடுத்த ராராமுத்திரைகோட்டை கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருடைய மகன் மகேஷ் (வயது37). இவரும், அதே ஊரைச் சேர்ந்த முருகேசன்(40), வன்னிப்பட்டுவை சேர்ந்த சிவானந்தம் மகன் சுகன் (18) ஆகியோர் கத்தரிநத்தத்தில் உள்ள கான்கிரீட்டால் ஆன ரெடிமேட் சுவர் செய்யும் நிறுவனத்தில் தொழிலாளர்களாக பணியாற்றினர். செங்கிப்பட்டி அருகே புதுக்குடியில் கட்டிட வேலை நடைபெற்றது. அங்கு செல்வதற்காக 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை மகேஷ் ஓட்டினார்.

தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொடைக் கானலில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு தஞ்சையை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. வல்லம் நகருக்குள் செல்வதற்காக முதலைமுத்துவாரி பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வல்லம் பிரிவு சாலைக்கு அரசு பஸ்சை டிரைவர் திருப்பினார். அப்போது 3 பேரும் வந்த மோட்டார் சைக்கிள் வந்த வேகத்தில் பஸ்சின் பக்கவாட்டில் பின்பக்க டயர் அருகே மோதியது. இதில மகேஷ், முருகேசன், சுகன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதை பார்த்த சிலர் வல்லம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.செல்லும் வழியிலேயே மகேஷ் பரிதாபமாக இறந்தார். முருகேசன், சுகன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story