3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: தஞ்சை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 2,900 பேர் வேலைநிறுத்தம் - ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
3 வங்கிகள் இணைப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பை சேர்ந்த 2,900 பேர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
தஞ்சாவூர்,
விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி ஆகிய 3 வங்கிகளையும் ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்த இணைப்பிற்கு வங்கி ஊழியர்கள் மற்றும் அகில இந்திய அனைத்து வங்கி அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த வங்கி இணைப்பால் ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு பாதிக்கப்படும். எனவே வங்கிகளை இணைக்க கூடாது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் 13 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் 250 கிளைகளை சேர்ந்த 2,900 பேர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் நேற்று தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகி சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி குருநாதன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் மோகனசுந்தரம், வீரமணி, சத்யா, ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் விஜயராகவன், வினோத், முருகையன், ராஜேந்திரன், தீபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story