மத்திய, மாநில அரசுகள் தமிழக விவசாயிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தக்கூடாது - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி


மத்திய, மாநில அரசுகள் தமிழக விவசாயிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தக்கூடாது - த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 27 Dec 2018 4:45 AM IST (Updated: 27 Dec 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழக விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தக்கூடாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

சுல்தான்பேட்டை, 

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம் உள்பட 13 மாவட்டங்களின் விளைநிலம் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைத்து மின்சாரம் எடுத்து செல்ல மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு உள்ளன. இதற்கான பணிகளில் மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட விவசாயிகள் சுல்தான்பேட்டையில் கடந்த சில நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் மற்றும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காத்திருப்பு போராட்டம் நேற்றுடன் 10-வது நாளாகவும், உண்ணாவிரத போராட்டம் 4-வது நாளாக நீடித்தது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 11 பேர் மிகவும் சோர்வுடன் உள்ள னர். அவர்களுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சுல்தான்பேட்டையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்ட பந்தலுக்கு வந்து விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து பேசினார். மேலும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பெண்களிடம் ஜி.கே.வாசன் அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகள் மீது அரசு அதிகாரிகள், காவல் துறையினர் அதிகாரத்தை பயன்படுத்தி திட்டங்களை கட்டாயப்படுத்தி திணிக்க பார்க்கிறார்கள். இது ஏற்புடையது அல்ல. விவசாயிகளின் நலன் கருதி மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் எடுத்து செல்லும் முயற்சியை அரசு கைவிட்டு இதற்கு மாற்று திட்டமாக சாலையோரங்களில் கேபிள் அமைத்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களாக காத்திருப்பு போராட்டமும், 4 நாட்களாக தங்கள் உடலை வருத்தி உண்ணாவிரதமும் இருந்து வருகின்றனர். இதேபோல் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

தமிழக விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தக்கூடாது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தென்னை மரங்களை காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகின்றனர்.

இந்தநிலையில், உயர் மின்கோபுரம் பிரச்சினை விவசாயிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனையாக உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விவசாயிகளின் நியாயமான இந்த கோரிக்கையை அரசு உடனடியாக ஏற்க வேண்டும். விவசாயிகளின் நலனை காப்பாற்ற, மேம்படுத்த த.மா.கா. எப்போதும் முன் நிற்கும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Next Story