வெடிச்சத்தம் குறித்து புவியியல் அதிகாரிகள் ஆய்வு - அமைச்சர் சீனிவாசன் தகவல்


வெடிச்சத்தம் குறித்து புவியியல் அதிகாரிகள் ஆய்வு - அமைச்சர் சீனிவாசன் தகவல்
x
தினத்தந்தி 27 Dec 2018 4:00 AM IST (Updated: 27 Dec 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

வெடிச்சத்தம் குறித்து புவியியல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல்,

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில், 2-வது தேசிய சித்த மருத்துவ தினம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று நடந்தது. இதற்கு, மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி பேசினார். வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் மருதராஜ், நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதிபிரகாஷ், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சித்த மருத்துவ கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது முன்னோர்கள் சித்த மருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளனர். தற்போது, டெங்கு, சிக்கன் குனியா போன்ற காய்ச்சல்களுக்கு நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட சித்த மருந்து தான் வழங்கப்படுகிறது. பல அரிய நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன.

இயற்கையாக கிடைக்கும் மருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். சுகப்பிரசவத்துக்கு தேவையான மருந்துகள் சித்த மருத்துவத்தில் வழங்கப்படுகிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை எம்.பி.பி.எஸ். படிக்க வைப்பதை போல சித்த மருத்துவம் படிக்க வைக்கவும் ஆசைப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, அமைச்சர் கூறுகையில், ‘சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தை ஏற்ற காரணமாக இருந்த மருத்துவ ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக் கப்பட்ட கர்ப்பிணிக்கு சிறப்பு மருத்துவ குழுவினர் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது குறித்து புவியியல் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’ என்றார்.

முன்னதாக, கர்ப்பிணிகளுக்கு 11 வகையான மருந்து பொருட்கள் அடங்கிய அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகத்தை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் மனோகர் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story