மேல்மலையனூர் அருகே புதிய பாலத்தில் கோதண்டராமர் சிலையை கொண்டு செல்ல அனுமதி மறுப்பு - மாற்றுப்பாதை அமைக்கும் பணி தீவிரம்
மேல்மலையனூர் அருகே புதிய பாலத்தின் வழியாக பிரமாண்ட கோதண்டராமர் சிலையை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதன் அருகே உள்ள பழைய பாலம் வழியாக சிலையை கொண்டு செல்ல மாற்றுப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேல்மலையனூர்,
பெங்களூரு ஈஜிபுரம் கோதண்டராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அகரக்கோட்டை கிராமத்தில் 108 அடி உயரமும், 25 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட விஸ்வரூப கோதண்டராமர் சிலை வடிவமைக்கப்பட்டது. பின்னர் அந்த சிலை 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூருக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த லாரி விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை, தீவனூர் வழியாக கடந்த 18-ந்தேதி மாலை செஞ்சியை வந்தடைந்தது. பின்னர் சிலையை செஞ்சிக்கோட்டை, தேசூர்பாட்டை, சிங்கவரம் சாலை, திருவண்ணாமலை வழியாக பெங்களூரு கொண்டு செல்ல முதலில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கு செஞ்சிக்கோட்டையை பராமரிக்கும் தொல்லியல்துறையினர், சிலையை கொண்டு சென்றால் பழங்கால கோட்டையின் மதில்சுவர்கள் சேதமாகும் என கூறி சிலையை கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிலையை கொண்டு செல்லும் குழுவினர் பிரமாண்ட கோதண்டராமர் சிலையின் இருபக்கமும் உள்ள பக்கவாட்டு பகுதிகளை வெட்டி 24 அடியாக அகலத்தை குறைத்தனர்.
இருப்பினும் செஞ்சிக்கோட்டை வழியாக சிலையை கொண்டு செல்லும்போது சாலையோரமுள்ள 50-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த சாலை வழியாக சிலையை கொண்டு செல்லும் முயற்சியை சிலை கொண்டு செல்லும் குழுவினர் கைவிட்டனர். இதனால் பிரமாண்ட கோதண்டராமர் சிலை லாரியுடன் செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரை அருகே ஒரு வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதிகாரிகள் ஆய்வு
இதற்கிடையே சிலையை கொண்டு செல்லும் குழுவினர் கோதண்டராமர் சிலையை செஞ்சியில் இருந்து வளத்தி, சேத்பட், சஞ்சீவிராயன்பேட்டை, அவலூர்பேட்டை, மங்களம் வழியாக பெங்களூரு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து அந்த சாலையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் சிலையை கொண்டு செல்லும் குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது ஆற்காடு-விழுப்புரம் சாலையில் கன்னலம் அருகே உள்ள தரைப்பாலம் உறுதித்தன்மை இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டதோடு, பாலத்தில் இரும்பு தகடு பொருத்தி பலப்படுத்தப்பட்டது. இதையடுத்து செஞ்சியில் சிலையுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கோ லாரி நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு, 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வளத்தி போலீஸ் எல்லைக்குட்பட்ட செல்லபிராட்டி கூட்டுசாலை அருகே மாலை 6 மணிக்கு நிறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று காலை அதிகாரிகள் சிலை கொண்டு செல்லப்படும் சாலையை ஆய்வு செய்தனர். அப்போது மேல்மலையனூர் அடுத்த நீலாம்பூண்டி-கன்னலம் இடையே புதிதாக கட்டப்பட்ட வாய்க்கால் பாலத்தில் சிலையை கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆகவே மாற்றுப்பாதையாக புதிய பாலத்தின் அருகே உள்ள பழைய பாலத்தின் வழியாக சிலையை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து லாரி செல்ல ஏதுவாக பழைய பாலத்தில் மண், கற்கள் கொட்டி சமன் செய்வதுடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மாற்றுப்பாதை அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து சிலையை எடுத்துச் செல்லும் குழுவை சேர்ந்த முனியப்பா என்பவர் கூறுகையில், ஆற்காடு-விழுப்புரம் நெடுஞ்சாலையில் கோதண்டராமர் சிலை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு, மாநில நெடுஞ்சாலைத்துறையினரிடம் அனுமதி கடிதம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். மேலும் மாற்றுப்பாதை அமைக்கும் பணியும் முடியும் தருவாயில் உள்ளது. எனவே இன்னும் ஓரிரு நாட்களில் சிலை புறப்படும் என்றார்.
Related Tags :
Next Story