நெல்லை சந்திப்பில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் உடையார்பட்டி குளம் அமலைச்செடிகளை அகற்றி தடுப்பு சுவர் கட்டப்படுமா?


நெல்லை சந்திப்பில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் உடையார்பட்டி குளம் அமலைச்செடிகளை அகற்றி தடுப்பு சுவர் கட்டப்படுமா?
x
தினத்தந்தி 27 Dec 2018 1:26 PM IST (Updated: 27 Dec 2018 1:26 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை சந்திப்பில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் உடையார்பட்டி குளத்தில் அமலைச்செடிகளை அகற்றி தடுப்பு சுவர் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நெல்லை, 

நெல்லை சந்திப்பில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் உடையார்பட்டி குளத்தில் அமலைச்செடிகளை அகற்றி தடுப்பு சுவர் கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

உடையார்பட்டி குளம்

நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் இருந்து மதுரை செல்கின்ற ரோட்டில் சிந்துபூந்துறைக்கு அருகில் உடையார்பட்டி குளம் உள்ளது. இந்த குளம் முற்காலத்தில் நெல்லை கால்வாயின் பாசன குளமாக இருந்தது. நெல்லை கால்வாயில் வருகின்ற தண்ணீர் மூலம் நயினார்குளம் நிரம்பும். பின்னர் அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர், பாலபாக்கியநகர் பகுதி வழியாக உடையார்பட்டி குளத்துக்கு வரும்.

தற்போது பாலபாக்கியநகர் பகுதியில் இருந்த பாசன நிலங்கள் எல்லாம் வீடுகளாகி விட்டது. இதனால் அந்த குளத்திற்கு தண்ணீர் வருகின்ற வாய்க்கால்களும், துணை வாய்க்கால்களும் தூர்ந்துவிட்டன. இதனால் குளத்திற்கு தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. குளத்தின் பாசன பகுதிகளும் வீடுகளாகி விட்டன. இதனால் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியே செல்லக்கூடிய வாய்க்கால்களும் அடைபட்டு விட்டன.

விபத்துகள்

மழை காலங்களில் பாலபாக்கியநகர் மற்றும் உடையார்பட்டி வடக்கு பகுதிகளில் இருந்து அதிகளவு தண்ணீர் குளத்திற்கு வரும். குளம் நிரம்பினால்தான் அதன் வடக்கு பகுதியில் உள்ள சின்ன வாய்க்கால் மூலம் தண்ணீர் வெளியேறும். இல்லாவிட்டால், குளத்திலேயே தண்ணீர் தேங்கி கிடக்கும். தற்போது குளத்தில் உள்ள தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படாமல் தேங்கி கிடக்கிறது. அதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கழிவுகள் மற்றும் மாட்டு சாணத்தை கொட்டி வைத்து உள்ளனர். மேலும் குளம் முழுவதும் அமலைச்செடிகளும், முட்புதர்களும் மண்டி கிடக்கின்றன. அத்துடன் கழிவுநீரும் குளத்தில் வந்து சேருகிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது.

குளத்தில் அமலைச்செடிகளும், முட்புதர்களும் மண்டி குளம் இருப்பதே தெரியாத அளவிற்கு உள்ளது. இதனால் நெல்லையில் இருந்து மதுரை ரோட்டில் வாகனங்களில் செல்கின்றவர்கள், அடிக்கடி குளத்திற்குள் வாகனங்களை இறக்கி விபத்தில் சிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரம் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் குளத்திற்குள் விழுந்து படுகாயம் அடைந்தனர்.

தடுப்பு சுவர்

எனவே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் அந்த குளத்தில் உள்ள அமலைச்செடிகள் மற்றும் முட்புதர்களை அகற்றி, குளத்துக்கு தடுப்பு சுவர் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். சிலர் நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் மூடப்பட்டு உள்ளதால் அந்த குளத்தை மூடி அங்கு தற்காலிக பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story