அரக்கோணம் அருகே 7–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை ‘போக்சோ’ சட்டத்தில் அரசு பஸ் கண்டக்டர் கைது
அரக்கோணம் அருகே 7–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் கண்டக்டர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரக்கோணம்,
அரக்கோணம் அருகே அரிகிலபாடி கிராமத்தை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 25–ந் தேதி கிறிஸ்துமஸ் அன்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் ஆனந்தன் (40) என்பவர் சிறுமியை ஒரு மறைவான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமியிடம் ஆனந்தன் பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பித்து கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் பெற்றோர்களிடம் அந்த சிறுமி, தன்னிடம் ஆனந்தன் தவறாக நடக்க முயன்றது குறித்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.கே.துரைப்பாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வசந்தி, சப்–இன்ஸ்பெக்டர் உமாராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி அரக்கோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் அரிகிலபாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.