பதவி உயர்வு வழங்கக்கோரி செயல் அலுவலர்கள் 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டம்


பதவி உயர்வு வழங்கக்கோரி செயல் அலுவலர்கள் 2-வது நாளாக விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2018 3:15 AM IST (Updated: 27 Dec 2018 10:20 PM IST)
t-max-icont-min-icon

பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மண்டலத்தில் அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் 2-வது நாளாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.

சேலம், 

பதவி உயர்வு வழங்க வேண்டும், மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு பணி இடமாறுதல் வழங்க வேண்டும், செயல் அலுவலர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், சிலை திருட்டு தொடர்பாக உண்மை நிலையை கண்டறிய நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மண்டலத்தில் அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் நேற்று முன்தினம் முதல் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுடைய போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதில் சேலம் மண்டலமான சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் 60-க்கும் மேற்பட்ட செயல் அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசுக்கு அனுப்ப வேண்டிய அறிக்கை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன. இவர்களுடைய போராட்டம் இன்றும்(வெள்ளிக்கிழமை) நீடிக்கிறது.

இதுகுறித்து அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் கூறும் போது, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தி வருகிறோம். தற்போது 3 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்து சேலம் மண்டலத்தில் 60-க்கும் மேற்பட்ட செயல் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Next Story