தரம் குறைந்த தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வினியோகம் குறைதீர்க்கும் கூட்டத்தில் குற்றச்சாட்டு


தரம் குறைந்த தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு வினியோகம் குறைதீர்க்கும் கூட்டத்தில் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Dec 2018 4:30 AM IST (Updated: 27 Dec 2018 10:42 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் தரம் குறைந்த தென்னங்கன்றுகள் வினியோகம் செய்யப்படுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

நாகர்கோவில், 

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வருவாய் அதிகாரி ரேவதி தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அசோக் மேக்ரின், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சுசீலா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வைத்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் விவரம் வருமாறு:-

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து தக்கலை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறைய குளங்கள் உள்ளன. ஆனால் இந்த குளங்களை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளது. தோட்டியோட்டில் குளத்தில் பெட்டிக்கடை வைக்கப்பட்டு இருக்கிறது. எனவே குளங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனே அகற்ற வேண்டும்.

குமரி மாவட்டத்தில் தென்னை மரங்கள் நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே தென்னை நோய் தொற்றை தடுக்க வழிவகை செய்தல் அவசியம். மேலும் விவசாயிகளுக்கு திசு வளர்ப்பு வாழை கன்றுகள் வழங்கப்படுவது போல திசு வளர்ப்பு தென்னை கன்றுகளை வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். வேளாண்மை துறையில் இருந்து தரமான தென்னை கன்றுகள் அனைத்தும் நர்சரிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு தரம் குறைந்த தென்னை கன்றுகளை வழங்குகிறார்கள். இந்த வகை தென்னை கன்றுகள் நிலத்தில் நட்ட சில நாட்களில் கருகி விடுகின்றன. எனவே தரமான தென்னை கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதே போல தரிசு நிலங்களில் வளரக்கூடிய புளியங்கன்றுகளையும் விவசாயிகளுக்கு வழங்குதல் அவசியம்.

குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் நிறைய பேருக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே அவர்களுக்கும் நிவாரணம் வழங்குதல் வேண்டும். குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் மாடுகளை மேய்க்க அனுமதி வழங்கப்படுவது இல்லை. அதே சமயம் தேனி மாவட்டத்தில் வனப்பகுதியில் மாடுகள் மேய்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்று குமரி மாவட்ட வனப்பகுதிகளிலும் மாடுகளை மேய்க்க அனுமதி அளித்தால் நன்மையாக அமையும். வேளாண்மைத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் பேசியபோது கூறியதாவது:-

பார்வதிபுரம் முதல் தக்கலை வரை ரோட்டோரம் உள்ள குளங்களில் தற்காலிக கடைகள் தான் அமைக்கப்படுகிறது. கடந்த மாதம் கூட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. எனவே மறுபடியும் ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்பு கடைகள் உடனே அகற்றப்படும். தென்னை மரங்களை நோயில் இருந்து காக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திசு வளர்ப்பு தென்னை கன்றுகள் தற்போது இல்லை. எனினும் திசு வளர்ப்பு தென்னை கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்படும் தென்னை கன்றுகளில் தரமானவை நர்சரிகளுக்கு வழங்கப்படுவதாக கூறுகிறீர்கள். இதுதொடர்பாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். புளியங்கன்றுகள் விவசாய பண்ணையில் கைவசம் இருக்கின்றன. எனவே புளியங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் மானிய விலையில் வாங்கி பயன் அடையலாம்.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் விவரங்களை கொடுத்தால் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். குமரி மாவட்ட வனப்பகுதி, சரணாலயமாக மாற்றப்பட்டு இருப்பதால் மாடுகளை மேய்க்க அனுமதி அளிக்க முடியாது என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.


தரம் குறைந்த தென்னை கன்றுகள் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டிய விவசாயி ஒருவர், கருகிய தென்னை கன்று ஒன்றையும் கொண்டு வந்திருந்தார். அதை அவர் கூட்டத்தில் இருந்த அனைவர் மத்தியிலும் எடுத்து காட்டினார். உடனே சம்பந்தப்பட்ட விவசாயிக்கு ஆதரவாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் பேச தொடங்கியதால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Next Story