ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கப்பட்டது பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்


ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கப்பட்டது பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
x
தினத்தந்தி 28 Dec 2018 4:30 AM IST (Updated: 27 Dec 2018 11:06 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கப்பட்டது. பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக நடந்து வந்தனர்.

ஈரோடு, 


ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. அன்று இரவு கம்பம் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. கடந்த 25-ந் தேதி பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். நேற்று முன்தினம் பொங்கல் விழாவும், மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

இந்த நிலையில் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில், காவிரிரோடு மாரியம்மன் கோவில், பெரியவலசு முத்து மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் திருவிழாவுக்காக நடப்பட்ட கம்பங்கள் நேற்று காலை பிடுங்கப்பட்டன. இந்த கம்பங்களை கோவிலின் பூசாரிகள் தங்களது தோளில் சுமந்துகொண்டு ஊர்வலமாக நடனமாடியபடி சென்றனர்.

ஊர்வலத்தில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு பக்தி கோஷங்களை எழுப்பியவாறு நடந்து சென்றனர். பெரியவலசு முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து கம்பம் கொண்டுவரப்பட்டபோது பெண்கள் மற்றும் சிறுமிகள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக நடந்து வந்தனர். இந்த ஊர்வலம் வீரப்பன்சத்திரம் தெப்பக்குளத்தில் நிறைவடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கம்பங்கள் தெப்பக்குளத்தில் விடப்பட்டது.

விழாவையொட்டி மலர் பல்லக்கில் அம்மனின் திருவீதிஉலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடக்கும் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Next Story