திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கோரி பவானிசாகரில் கடையடைப்பு போராட்டம்


திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கோரி பவானிசாகரில் கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Dec 2018 10:45 PM GMT (Updated: 27 Dec 2018 5:43 PM GMT)

திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கோரி பவானிசாகரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

பவானிசாகர்,

பவானிசாகரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் வசித்து வருகிறார்கள்.

இந்த முகாமில் தங்கி உள்ள சிலர் பவானிசாகர் பகுதியில் திருட்டு, கொள்ளை போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக அங்குள்ளவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். எனவே இதுபோன்று குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கைதுசெய்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு அதிக அளவில் தங்க வைக்கப்பட்டு உள்ள இலங்கை அகதிகளை வேறு முகாம்களுக்கு மாற்ற வேண்டும் என அனைத்து கட்சி மற்றும் கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 27-ந் தேதி பவானிசாகர் பகுதியில் கடையடைப்பு போராட்டமும், போலீஸ் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம், பவானிசாகர் தி.மு.க. பொறுப்பாளர் முத்துசாமி உள்பட அனைத்து கட்சியை சேர்ந்தவர்கள், வியாபாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பவானிசாகர் பஸ் நிலையம் அருகே ஒன்று திரண்டு வந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் கிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அதிக அளவில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை வேறு முகாமுக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிடும் முடிவை கைவிட்டனர்.

எனினும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. கடையடைப்பு போராட்டம் காரணமாக பவானிசாகர் நகர், அணை பூங்கா பகுதி, பகுடுதுறை, அண்ணாநகர் ஆகிய இடங்களில் உள்ள 400-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பின்னர் மதியத்துக்கு மேல் ஒவ்வொரு கடையாக திறக்கப்பட்டது. மாலையில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

Next Story