கள்ளத்தொடர்பை கைவிடச்சொல்லி மனைவி மிரட்டல் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
பெருந்துறை அருகே, கள்ளத்தொடர்பை கைவிடச்சொல்லி மனைவி மிரட்டியதால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பெருந்துறை,
பெருந்துறை அருகே உள்ள கருக்கம்பாளையம் காமராஜ் தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 38). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சின்னம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கருப்புசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. மேலும் அவருக்கு, ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இது தொடர்பாக நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது கருப்புசாமியிடம் சின்னம்மாள், ‘குடிப்பழக்கத்தையும் விடவில்லை. வேறொரு பெண்ணிடம் உள்ள கள்ளத்தொடர்பையும் கைவிடவில்லை. எனவே நான் இதுபற்றி போலீசில் புகார் அளிக்க போகிறேன்,’ என மிரட்டிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அவர் போலீசுக்கு செல்லவில்லை.
எனினும் தன்னுடைய மனைவி போலீசில் சென்று புகார் அளித்து விடுவாளோ என்று பயந்து சேலையால் வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்குப்போட்டு கருப்புசாமி தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்ததும் காஞ்சிக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கருப்புசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story