உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகளுடன் அரசியல் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் மேட்டுக்கடை பகுதியில் கடைகள் அடைப்பு


உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகளுடன் அரசியல் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் மேட்டுக்கடை பகுதியில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 28 Dec 2018 4:45 AM IST (Updated: 27 Dec 2018 11:39 PM IST)
t-max-icont-min-icon

உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுடன் அரசியல் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக மேட்டுக்கடை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

ஈரோடு, 

விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் நெடுஞ்சாலை வழியாக மின் கேபிள் பதித்து மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். மேலும், அதிகாரிகள் தரப்பில் விவசாயிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்பட 8 மாவட்டங்களில் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.

ஈரோடு அருகே மூலக்கரை பகுதியில் விவசாயிகள் பலர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, பாடைகட்டி ஆர்ப்பாட்டம், சங்கு ஊதுதல், இடுப்பில் வேப்பிலைகளை கட்டிக்கொண்டு புற்களை கடித்தல் உள்பட பல்வேறு நூதன போராட்டத்தை நடத்தினார்கள். மேலும், கடந்த 23-ந் தேதி முதல் 6 பெண்கள் உள்பட 11 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்கள் 5 நாட்களாக நீர் ஆகாரம் மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் மிகவும் சோர்வுடன் போராட்டம் நடக்கும் பந்தலில் படுத்தே இருந்தனர்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 11-வது நாளாக நேற்றும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தது. இதில் விவசாயிகளும், அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.எம்.முனுசாமி, வி.பி.குணசேகரன், கவின், கொங்கு பூபதி, ராசு, எம்.எம்.பழனிசாமி, துரைசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் சி.எம்.துளசிமணி உள்பட விவசாயிகள் பலர் உண்ணாவிரதம் இருந்தனர்.

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ம.தி.மு.க. மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், துணைத்தலைவர் ஆறுமுகம், இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா, செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, கோவிந்தராஜ், ராஜா, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் என்.ஆர்.வடிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கோபால், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சித்திக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ரகுராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் முகமது சலீம், ஈரோடு மாவட்ட அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலகிருஷ்ணன், தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன், அனைத்து தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு அருகே மேட்டுக்கடை பகுதியில் நேற்று வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். அங்குள்ள ஓட்டல்கள், பேக்கரிகள், மளிகைக்கடைகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

Next Story