திருப்பூண்டியில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள்-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருப்பூண்டியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வேளாங்கண்ணி,
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டியில் இருந்து தலைஞாயிறு வரை செல்ல கூடிய சாலை உள்ளது. இந்த சாலை கிழக்குகடற்கரை சாலையில் இருந்து பிரிந்து திருப்பூண்டி, சிந்தாமணி, காரப்பிடாகை, சடையன் கோட்டகம் வழியாக தலைஞாயிறு வரை செல்கிறது.இந்த சாலையை திருப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை மற்ற பகுதிகளுக்கு எடுத்து செல்வதற்கும் இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர்.
தற்போது திருப்பூண்டி கடைத்தெருவில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழைகாலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. கடைத்தெருவில் மாலை நேரங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அப்போது குண்டும், குழியுமான சாலையை விட்டு வாகனங்கள் ஒதுங்கி, செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. குறிப்பாக இந்த பகுதியில் பஸ் போக்குவரத்து நடைபெறுவதால் அந்த நேரத்தில் நெரிசல் ஏற்பட்டு மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
சைக்கிளில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். ஆரம்ப சுகாதார வளாகம் மற்றும் அரசு மருத்துவமனை உள்ளதால் இந்த வழியாக 108 ஆம்புலன்ஸ் செல்ல காலதாமதமாகிறது. சைக்கிள், மோட்டார் சைக்கிள், ஆட்டோக்களில் செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும், குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, திருப்பூண்டி கடைத்தெருவில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story