20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் 18-வது நாளாக வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
20 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 18-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. மேலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதலில் கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரையை கட்டாயமாக்கிட வேண்டும். கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும். அலுவலகங்களில் குடிநீர், கழிவறை மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த 10-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 18-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது.இதை தொடர்ந்து திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ககாரின் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் பாலசுப்்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பரப்புரை செயலாளர் ராஜா, மாவட்ட மகளிரணி தலைவி ஜெயசுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தினால் நிவாரண பணிகள் உள்பட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story