நிவாரண பொருள் வினியோகத்தில் முறைகேடு: கிராம மக்கள் சாலை மறியல்


நிவாரண பொருள் வினியோகத்தில் முறைகேடு: கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 Dec 2018 3:45 AM IST (Updated: 28 Dec 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

நிவாரண பொருள் வினியோகத்தில் முறைகேடு நடப்பதாக கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர், 

‘கஜா’ புயலால் திருவாரூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், மன்னார்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் பாதிக்கப்பட்டன. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 27 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நிவாரண பொருட்களை முழுமையாக வினியோகம் செய்யவில்லை என கூறி திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள உமாமகேஸ்வரபுரம், ஈஞ்சல், கீழத்துரைக்குடி, மேலத்துரைக்குடி, சிவணாண்டார் கோவில் உள்ளிட்ட கிராமங்களில் நிவாரண பொருட்களை வினியோகம் செய்வதில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டி கிராம மக்கள் மாவூர் கடை வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாசில்தார் குணசீலி மற்றும் திருவாரூர் தாலுகா போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

மறியல் போராட்டம் காரணமாக திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள மழவராயநல்லூர், திருவெண்டுதுறை, கருப்பட்டி மூலை, உச்சிமேடு தட்டாங்கோவில் ஆகிய 5 கிராமங்களில் 1,000 குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 900 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் நிவாரண தொகை கிடைக்கவில்லை. எனவே புயலால் பாதிக்கப்பட்ட 1,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வடிவாய்க்கால் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், மன்னார்குடி மண்டல துணை தாசில்தார் சந்திரமோகன், கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story