‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்ட ராட்சத குழாய் உடைப்பு சீரமைப்பு ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுத்து நிறுத்தம்


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்ட ராட்சத குழாய் உடைப்பு சீரமைப்பு ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 28 Dec 2018 3:30 AM IST (Updated: 28 Dec 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி காரணமாக பாதாள சாக்கடை கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பு அடைக்கப்பட்டது. இதனால் ஆற்றில் கழிவுநீர் கலப்பது தடுத்து நிறுத்தப்பட்டது.

தஞ்சாவூர், 


தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 4 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த 4 கழிவுநீர் உந்து நிலையங்களில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் கழிவுநீர் மாரியம்மன்கோவில் அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள மாரிக்குளம் சுடுகாட்டில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் இருந்து ராட்சத குழாய் அமைக்கப்பட்டு கழிவுநீர் சமுத்திரம் ஏரியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. கழிவுநீர் செல்வதற்காக தஞ்சை- நாகை சாலையில் சாந்தப்பிள்ளை கேட் அருகே புது ஆற்றில் நடைபாலம் அமைக்கப்பட்டு அதில் ராட்சத குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து கழிவுநீர் அருவி போல வெளியேறி ஆற்றுக்குள் கலந்தது. இதனால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க அச்சமடைந்தனர். இதனை அடைக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்து இருந்தனர். இது தொடர்பாக ‘தினத்தந்தி’ நாளிதழில் கடந்த 26-ந் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை பார்வையிட்டு உடனடியாக அடைத்தனர். ராட்சத குழாய் இரும்பு குழாய் என்பதால் வெல்டிங் செய்து, ஓட்டையை அடைத்தனர். இதன் மூலம் கழிவுநீர் ஆற்றில் கலந்தது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story