சேலம் அருகே கழுத்து அறுக்கப்பட்ட கல்லூரி மாணவர் சாவு கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை
சேலம் அருகே, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தர்மபுரியை சேர்ந்த கல்லூரி மாணவர் உயி ரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்,
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஈச்சம்பட்டி வெள்ளையன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மகன் மதியழகன் (வயது 20). இவர், தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 23-ந் தேதி சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் ஒரு ஓட்டலின் பின்புறத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மதியழகனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
தொடர்ந்து அவர் மயங்கிய நிலையில் இருந்ததால் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் குறித்து அவரிடம் போலீசார் விசாரிக்க முடியவில்லை. இருப்பினும் ஆஸ்பத்திரியில் நாளுக்கு நாள் அவரது நிலைமை மோசமானது. தன்னை தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது அவரது கழுத்தை வேறு நபர்கள் அறுத்தார்களா? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர்.
இந்தநிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் மதியழகன் நேற்று முன்தினம் இரவு திடீரென உயிரிழந்தார். இது தொடர்பாக அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
மாணவர் மதியழகனுக்கு அவரது பெற்றோர் ஆசை, ஆசையாய் விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த செல்போனையும், மடிக்கணினியும் தொலைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அவரை கண்டித்தனர். தாங்கள் வாங்கி கொடுத்த செல்போனை பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. நீ எப்படி படிக்கப்போகிறாய்? என்று எங்களுக்கு தெரியவில்லை என கண்டித்து சத்தம் போட்டுள்ளனர். இதனால் மனம் உடைந்த மதியழகன் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி சேலத்திற்கு வந்துள்ளார்.
பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி விவரம் பெற்றோருக்கு தெரியவில்லை. இதனால் அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 23-ந் தேதி பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்து மதியழகனை தேடி வந்தனர். ஆனால் அதேநாளில் சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் கழுத்து, இடது கை அறுக்கப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டார். ஆனால் மயக்க நிலையில் இருந்ததால் அவரிடம் எங்களால் வாக்குமூலம் பெறமுடியவில்லை.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இது ஒருபுறம் இருக்க, பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த அவர் தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையில் அவரை மர்ம ஆசாமிகள் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story